கடுமையான தேடுதல் பணியின் பின்னர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த மூன்று இளைஞர்களும் சடலங்களாக மீட்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, October 4, 2020

கடுமையான தேடுதல் பணியின் பின்னர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த மூன்று இளைஞர்களும் சடலங்களாக மீட்பு

(செ.தேன்மொழி) 

நீர்கொழும்பு - கம்பல்தொட பகுதியில் கடலில் நீராடச் சென்று காணாமல் போயிருந்த தலவாக்கலை மற்றும் பதுளைப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இன்று சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக கொச்சிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். 

கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீர்கொழும்பு - கம்பல்தொட கடற்பகுதியில் கடலில் நேற்று சனிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நீராடிக் கொண்டிருந்த இளைஞர்கள் மூவர் நீரிழ் மூல்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

கொழும்பு - தங்கொட்டுவ பகுதியில் தொழிற்சாலை ஒன்றில் தொழில் புரிந்து வந்துள்ள குறித்த இளைஞர்கள் நேற்று மாலை நீராடுவதற்காக, தனது நண்பர்களுடன் நீர்கொழும்பு கடலுக்குச் சென்றுள்ளனர். இதன்போது மூன்று இளைஞர்கள் அலைக்குள் சிக்குண்டு கடலினுள் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்தனர். 

இந்நிலையில் கடற்படையின் சுழியோடிகளும், பொலிஸாரும் இளைஞர்களை தேடும் பணிகளை ஆரம்பித்ததுடன், இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் குறித்த இளைஞர்கள் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

தலவாக்கலை - ஸ்டேலின் தோட்டத்தைச் சேர்ந்த 22 வயதுடைய முத்துகுமார் சிந்துஜன், 23 வயதுடைய மனோகரன் சசிகுமார் மற்றும் பதுளை - நமுனுகள பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய புகனேந்தர் பிரதீபன் என்ற இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். 

சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலங்களை, குடும்பத்தினருக்கு ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment