ரிஷாட் பதியுதீனின் பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் இரு சாரதிகள், தேடப்பட்டு வந்த கணக்காளர் ஆகியோர் கைது - இரு வாகனங்கள் மீட்பு - News View

Breaking

Post Top Ad

Wednesday, October 14, 2020

ரிஷாட் பதியுதீனின் பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் இரு சாரதிகள், தேடப்பட்டு வந்த கணக்காளர் ஆகியோர் கைது - இரு வாகனங்கள் மீட்பு

கடந்த 2019 ஜனாதிபதித் தேர்தலின்போது, இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்கு போக்குவரத்து வழங்கிய குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் 3 பேரில் ஒருவரான, மீள்குடியேற்ற அமைச்சின் அப்போதைய கணக்காளர் அழகரத்னம் மனோரஞ்சன் கைது செய்யப்பட்டு, எதிர்வரும் ஒக்டோபர் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அப்போதைய கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அப்போதைய மீள்குடியேற்ற திட்ட பணிப்பாளர் சம்சுதீன் மொஹமட் யாசீன், அவ்வமைச்சின் முன்னாள் கணக்காளர் அழகரத்னம் மனோரஞ்சன் ஆகிய மூன்று பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 2019 ஜனாதிபதித் தேர்தலின் போது, இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான 222 பஸ்கள் மூலம் இடம்பெயர்ந்து புத்தளத்தில் வாழும் வன்னி மாவட்ட வாக்காளர்களை வாக்களிப்பதற்கான போக்குவரத்து வசதிகளை ஏற்டுத்திக் கொடுப்பதற்காக, மீள்குடியேற்ற அமைச்சிற்கு சொந்தமான ரூபா 95 இலட்சத்திற்கும் அதிகமான நிதியை முறைகேடாக பயன்பத்தியதற்கு அமைய, பொதுச் சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தியமை மற்றும் தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் பேரில் அவரை கைது செய்ய சட்டமா அதிபர், பொலிஸ் மாஅதிபருக்கு உத்தரவிட்டதாக, சட்ட மாஅதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.

குறித்த நபர்கள் மூவரையும் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, சட்டமா அதிபரினால் பொலிஸ்மா அதிபருக்கு விடுத்த ஆலோசனைக்கு அமைய, இது தொடர்பில், நேற்றையதினம் (13) குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் (CID) பிரதிப் பொலிஸ்மா அதிபரின் நேரடி கண்காணிப்பின் கீழ் 6 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

குறித்த பொலிஸ் குழுவின் தேடுதலின் அடிப்படையில், கிருலப்பனை பகுதியில், குறித்த சந்தேகநபரான கணக்காளர் அழகரத்னம் மனோரஞ்சன் CID யினால் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சந்தேகநபர் இன்றையதினம் (14) கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தியதைத் தொடர்ந்து, அவருக்கு எதிர்வரும் ஒக்டோபர் 26ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டதன் அடிப்படையில், பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு பாதுகாப்பு வழங்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நேற்றையதினம் (13) பிற்பகல் 6.00 மணியளவில் வெள்ளவத்தை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டதாக, அஜித் ரோஹண தெரிவித்தார்.

முக்கியஸ்தருக்கு பாதுகாப்பு வழங்கும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், குறித்த முக்கியஸ்தர் குற்றவாளியாக பெயரிடப்படும் நிலையில், குறித்த பொலிஸ் அதிகாரி தனது கடமையை நிறைவேற்றத் தவறியதன் அடிப்படையில், இலங்கை குற்றவியல் சட்டத்தின் 209ஆம் பிரிவின் கீழ், அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக, அஜித் ரோஹண தெரிவித்தார்.

இதேவேளை, குறித்த வழக்கின் முதலாவது சந்தேகநபரான ரிஷாட் பதியுதீன் நேற்றையதினம் (13) பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் இரு வாகனங்களை (Range Rover Jeep, Axio Car) வெள்ளவத்தை பிரதேசத்தில் வைத்து கைப்பற்றியதாக அஜித் ரோஹண தெரிவித்தார்.

குறித்த வாகனங்கள் இரண்டிலும் இரு கைத்துப்பாக்கிகள், 4 மெகசின்கள், அதற்கான தோட்டாக்கள் 48 ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

குறித்த வாகனங்களின் சாரதிகள் 56 மற்றும் 45 வயதுடைய புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்களையும் இன்றையதினம் (14) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், DIG அஜித் ரோஹண தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad