(செ.தேன்மொழி)
நாடு பாரிய சுகாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்ற நிலையில், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஒருவர் நியமிக்கப்படாமல் இருப்பதானது, இராணுவத் தளபதி ஒருவர் இல்லாது யுத்தத்திற்கு முகங்கொடுப்பது போன்ற நிலைக்கு நிகரானது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் நாட்டு மக்கள் மீண்டும் சுகாதார, பொருளாதார மற்றும் சமூக பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றார்கள்.
இந்நிலையில், அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களை பணிகளுக்கு செல்லுமாறு கூறுகின்றனர். ஆயினும் புறக்கோட்டை பகுதியில் பேருந்து தரிப்படங்கள் மூடப்பட்டுள்ளன. இவ்வாறான நிலையில் ஊழியர்கள் எவ்வாறு தமது சேவை நிலையங்களுக்கு செல்வார்கள். அரசாங்கம் இதற்கு மாற்று வழியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டியது அவசியமானதாகும்.
இத்தகைய சுகாதார பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுத் தருவதற்கு சுகாதார மற்றும் தொற்று நோயியல் நிபுணர்களே தலைமை தாங்க வேண்டும்.
இதேவேளை, வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டவுடன் அந்த பகுதிகளை முடக்க தீர்மானிப்பவர்கள், அப்பகுதி மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோன்று ,வைரஸ் தொற்று மீண்டும் பரவலடைவதற்கு காரணமாக இருந்த ஆடை தொழிற்சாலை உள்ளிட்ட நிறுவனங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கையும் எடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment