மதம் கடந்து மனித மாண்புகளைக் காத்து புதிய யுகம் படைக்க கைகோர்த்திடுங்கள் - மதத் தலைவர்களுக்கு யாழ் பல்கலைக்கழக உபவேந்தர் அறைகூவல் - News View

About Us

About Us

Breaking

Sunday, October 4, 2020

மதம் கடந்து மனித மாண்புகளைக் காத்து புதிய யுகம் படைக்க கைகோர்த்திடுங்கள் - மதத் தலைவர்களுக்கு யாழ் பல்கலைக்கழக உபவேந்தர் அறைகூவல்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மதம் கடந்து மனித மாண்புகளைக் காத்து புதிய யுகம் படைக்க கைகோர்க்குமாறு தான் இலங்கையிலுள்ள அனைத்து மதத் தலைவர்களையும் வினயமாகக் கேட்டுக் கொள்வதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக உபவேந்தரும் பேராசிரியருமான எஸ். ஸ்ரீசற்குணராஜா அறைகூவல் விடுத்தார்.

தினகரன் பத்திரிகை ஆரம்பித்து அதன் 88வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் முகமாக வடபகுதிக்காக உதயம் பத்திரிகை வெளியீட்டு விழாவில் உபவேந்தர் அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.

வெள்ளிக்கிழமை 02.10.2020 யாழ்ப்பாண பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர்களான கெஹெலிய ரம்புக்வெல்ல, டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் உள்ளிட்டோரும் இன்னும் பல அரசியல் பிரமுகர்களும் உயரதிகாரிகளும் பொது மக்களும் மாணவர்களும் ஊடகத்துறை சார்ந்தோரும் கலந்துகொண்டனர்.

உபவேந்தர் ஸ்ரீசற்கணராஜா அங்கு தொடர்ந்தும் பேசுகையில் இலங்கையர்களாகிய நாங்கள் எந்த மதத்தவராகவும் இருக்கலாம்.
அதேவேளை மதம் கடந்து மனித நேயம் காத்து இலங்கைத் தாயின் மடி தவழும் சகோதரப் புதல்வர்களாக உருவாவதற்கு உதவுமாறு நான் மதத் தலைவர்களுக்கு அறைகூவல் விடுக்கின்றேன். அதுவே சிறப்பானது. அமைதியானது ஆனந்தமானது.

இலங்கையின் வடபகுதி தனிச்சிறப்புகளோடு பல்வேறு நூதனங்களையும் கொண்டு இலங்குகிறது. அதிலும் குறிப்பாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கும் தனிப்பெருஞ் சிறப்பு உண்டு. இங்கு சகவாழ்வும் சமூக ஐக்கியமும் மேலோங்கி நிற்பதற்கு இங்கு கற்கும் 14 ஆயிரம் மாணவர்களும் சாட்சிகளாக இருப்பார்கள்.

4 ஆயிரம் சிங்கள சமூக மாணவர்களையும் 900 முஸ்லிம் மாணவர்களையும் சுமார் 9 ஆயிரம் தமிழ் சமூக மாணவர்களையும் கொண்டு இந்தப் பல்கலைக்கழகம் அழகு பெறுகிறது.

மருத்துவம், பொறியியல், சட்டத்துறை, உள்ளிட்ட 13 வகையான கல்வித் துறைகளைத் தன்னகத்தே கொண்டு இந்தப் பல்கலைக்கழகம் நாட்டுக்கு ஒரு தனிச் சிறப்பை பெற்றுக் கொடுக்கிறது.” என்றார்.

No comments:

Post a Comment