(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)
சர்வதேசத்துடன் மேற்கொள்ளப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களாலும் நாட்டுக்கு நன்மையைவிட பாதிப்பே அதிகமாகும். அத்துடன் ஊரடங்கு சட்டம் காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் மக்களின் வாழ்வாதாரத்துக்கு அரசாங்கத்திடம் எந்த வேலைத்திட்டமும் இல்லை என தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று சர்வதேச ஒப்பந்தங்கள் தொடர்பான சபை ஒத்துவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டை ஆட்சி செய்த அரசாங்கங்கள் சிங்கப்பூர், இந்தியா போன்ற நாடுகளுடன் வர்த்தக ஒப்பங்களில் கைச்சாத்திட்டிருக்கின்றன. அதேபாேன்று சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி போன்றவற்றுடனும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்திருக்கின்றன. இந்த ஒப்பந்தங்கள் அனைத்தையும் பார்க்கும்போது அவற்றினால் நாட்டுக்கு நன்மை கிடைத்ததைவிட பாதிப்பே ஏற்பட்டுள்ளது.
இந்த நிலை ஏற்படுவதற்கு பிரதான காரணமாக இருப்பது நாட்டுக்கு தேசிய கொள்கை ஒன்று இல்லாமையாகும். அதன் பிரகாரம் கடந்த அரசாங்கத்தில் மேற்கொள்ள இருந்த எம்.சீ.சீ. ஒப்பந்தம் தொடர்பில் தற்போதைய ஆளுங்கட்சியினர் கடுமையாக விமர்சித்ததுடன் அதனை எரிப்பதாக தெரிவித்தனர்.
ஆட்சிக்கு வந்த பின்னர் எம்.சீ.சீ. தொடர்பில் மீளாய்வு செய்ய குழுவொன்றை நியமித்து அதன் அறிக்கை கையளிக்கப்பட்ருக்கின்றது. குழுவின் பரிந்துரைக்கமைய எம்.சீ.சீ. ஒப்பந்தத்தில் கைச்சாத்திட முடியாது. அப்படியாயின் எம்.சீ.சீ. தீர்மானம் தொடர்பில் வெளிப்படையாக தெரிவிக்க அரசாங்கம் ஏன் அச்சப்படுகின்றது? அது தொடர்பில் உறுதியை அரசாங்கத்தினால் வழங்க முடியாது. முடியுமானால் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்,
இதேவேளை கொராேனா தொற்று பரவுவதை தடுக்கும் நோக்கில் கம்பஹா மாவட்டத்தின் பல பிரதேசங்களுக்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கின்றது. சில பிரதேசங்கள் கடந்த 5 நாட்களாக பூரணமாக அடைக்கப்பட்டிருக்கின்றன. கடைகள் பூட்டப்பட்டிருப்பதால் அந்த மக்கள் தேவையான அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு முடியாமல் இருக்கின்றனர்.
அன்றாடம் உழைத்து வரும் இந்த மக்களின் வாழ்வாதாரத்துக்கு அரசாங்கத்தினால் எந்த வேலைத்திட்டமும் மேற்கொள்ளப்படவில்லை. அதனால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை உடனடியாக பெற்றுக்காெடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

No comments:
Post a Comment