(செ.தேன்மொழி)
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் காணொளிப் பதிவொன்றை வெளியிட்டுள்ள அவர், அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது, 18 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் அமுலில் உள்ளது. அந்த பகுதியில் வசிப்பவர்கள் வீடுகளை விட்டு வெளியே செல்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை 6 மணி வரையான காலப்பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 79 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதற்கமைய 18 மோட்டார் சைக்கிள்களும் ஒரு முச்சக்கர வண்டியும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதேவேளை, சுகாதார அதிகாரிகள் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது, அதற்கு எதிர்ப்பை தெரிவித்து அவர்களது நடவடிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள பகுதிகளின் ஊடாக பொதுப் போக்குவரத்து சாதனங்கள் போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபட முடியும். இதேவேளை அந்த பகுதிகளில் ஆட்களை ஏற்றுவதோ, இறக்குவதோ தடை செய்யப்பட்டுள்ளது.
சுகாதார தேவைகளுக்காக வைத்தியசாலைகளுக்கு செல்வோர்களுக்கு ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரம் அவசியமில்லை.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குரிய அறிகுறிகள் காணப்படும் நபர்கள் வெளியில் செல்லாது, அவர்களின் வீடுகளில் இருந்து கொண்டே அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்க வேண்டும். அவ்வாறு அறிவிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு உரிய சேவை பெற்றுக் கொடுக்கப்படும்.
அதேவேளை, வீடுகளில் உள்ளவர்கள் தமது வீட்டை அண்டிய பகுதிகளை சுத்தம் செய்யவதில் எந்த பிரச்சினையும் இல்லை. மாறாக குழுக்களாக கூடி எந்த நடவடிக்கைகளிலும் ஈடுப்படக்கூடாது, இதுபோன்ற செயற்பாடுகள் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளன.

No comments:
Post a Comment