ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் வீடுகளில் டெங்கு பரிசோதனை - வழக்குத் தொடரப்படும் என்றும் எச்சரிக்கை - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 14, 2020

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் வீடுகளில் டெங்கு பரிசோதனை - வழக்குத் தொடரப்படும் என்றும் எச்சரிக்கை

எஸ்.எம்.எம்.முர்ஷித்

ஓட்டமாவடி, கோறளைப்பற்று மேற்கு, சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு வாரத்தினை முன்னிட்டு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் வழிகாட்டலில் டெங்கு தடுப்பு வேலைத் திட்டம் நடைபெற்று வருகின்றது.

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஏ.எல்.நௌபர் தலைமையில் டெங்கு தடுப்பு வேலைத் திட்ட ஆரம்ப கூட்டம் இன்று புதன்கிழமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் பொது சுகாதார பரிசோதகர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள், வாழைச்சேனை பொலிஸ் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
அதன் பிற்பாடு ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள கிராமங்களில் அதிகம் டெங்கு தாக்கம் காணப்படும் கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு சென்று டெங்கு பரிசோதனை செய்யும் நடவடிக்கை நடைபெற்றதுடன், ஓட்டமாவடி 02ம் வட்டாரத்தில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் காணப்படுவதனால் அப்பகுதியில் உள்ள வடிகான்கள் துப்பரவு செய்யும் நடவடிக்கை இடம்பெற்றது.

இதன்போது டெங்கு நோய் பரவும் வகையில் நீர் தாங்கி மற்றும் கழிவுகளை வைத்திருந்தவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், இதற்கு பிறகு இவ்வாறு சுத்தம் இல்லாமல் இருந்தால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டனர்.

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் 10ம் திகதி வரை 211 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் செப்டம்பர் மாதம் 10ம் திகதி வரை 12 பேர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார்.

No comments:

Post a Comment