மாளிகைக்காடு ஜனாஸா மையவாடிக்கான மாற்று காணி இட ஒதுக்கீடு தொடர்பான பிரேரணை சகல உறுப்பினர்களின் வாதப்பிரதிவாதங்களால் வாபஸ் பெறப்பட்டது - News View

Breaking

Post Top Ad

Wednesday, October 14, 2020

மாளிகைக்காடு ஜனாஸா மையவாடிக்கான மாற்று காணி இட ஒதுக்கீடு தொடர்பான பிரேரணை சகல உறுப்பினர்களின் வாதப்பிரதிவாதங்களால் வாபஸ் பெறப்பட்டது

பாறுக் ஷிஹான்

மாளிகைக்காடு அந்நூர் ஜும்ஆப் பள்ளிவாசலின் ஜனாஸா மையவாடியின் சுற்றுமதிலின் ஒரு பகுதி கடலரிப்புக்கு இலக்காகி இடிந்து விழுந்துள்ளமையைத் தொடர்ந்து புதிய மையவாடிக்கான இடவொதுக்கீடு தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை சகல உறுப்பினர்களின் வாதப்பிரதிவாதங்களால் வாபஸ் பெறப்பட்டது.

அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கே.ஜெயசிறில் தலைமையில் காரைதீவு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு சபா மண்டபத்தில் இன்று (14) முற்பகல் இடம்பெற்ற போது, உப தவிசாளர் ஏ.எம்.ஜாகீரினால் புதிய ஜனாஸா மையவாடிக்கான இடவொதுக்கீடு தொடர்பில் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டு அப்பிரேரணை தொடர்பில் உரையாற்றியிருந்தார்.

இதற்கமைய தவிசாளர் குறித்த பிரேரணை தொடர்பில் சபையிலுள்ள உறுப்பினர்கள் யாராவது கருத்துக்களைத் தெரிவிக்க விரும்புகின்றீர்களா? எனக் கேட்கப்பட்ட நிலையில், உறுப்பினர்களான ஏ.ஆர்.எம்.பஸ்மீர், எம்.எச்.எம்.இஸ்மாயில், குமாரசிறி சசிகுமார் உள்ளிட்ட உறுப்பினர்கள் புதிய மையவாடிக்காக இடவொதுக்கீடு தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேணை தொடர்பாக பல்வேறு விமர்சனங்களைத் தெரிவித்ததுடன், பிரேரணையை ஏற்காமல் அதனை இரத்துச் செய்ய வேண்டுமென்ற ரீதியில் தத்தமது உரைகளில் குறிப்பிட்டனர்.

இதனையடுத்து, தவிசாளர் குறித்த பிரேரணை காணி விடயம் என அறிந்துள்ள போதிலும், பிரதேச செயலாளரின் கவனத்திற்கு கொண்டு சென்ற பின்னரே நாம் பிரேரணையை கூட்டத் தொடரில் இணைத்திருக்க வேண்டும். ஆனால், பிரேரணையை எடுத்து விட்டு வாதப்பிரதிவாதங்களில் ஈடுபடுகின்றோம்.

எனவே, இவ்விடயத்தில் அரசியல் சாயங்களைப் பூசாமல் இரு சமூக மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்டு பிரதேச செயலாளர் தலைமையிலான குழுவில் காரைதீவு பிரதேச சபை உள்ளடக்கப்பட்டு ஏனைய மதத் தலைவர்கள் உள்ளிட்ட தரப்பினர்களுடன் குழுவொன்றினை அமைத்து தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறினார்.

இதனைத் தொடர்ந்து சகல உறுப்பினர்களும் தவிசாளரின் முடிவிற்கு கட்டுப்பட்டதுடன், உப தவிசாளரினால் இன்று கொண்டு வரப்பட்ட பிரேரணை வாபஸ் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கடலின் பாரிய அலைகளினால் அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட மாளிகைக்காடு அந்நூர் ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு முன்பாகவுள்ள ஜனாஸா மையவாடியின் சுற்றுமதில் உடைந்து விழுந்தமை காரணமாக புதைக்கப்பட்டுள்ள சடலங்கள் கடலில் அடித்தச் செல்லும் நிலை ஏற்பட்டிருந்ததுடன், ஜனாஸா மையவாடியின் சுற்றுமதில்கள் கடலரிப்புக்குள்ளாகி இடிந்து விழுந்துள்ளதையடுத்து அதனைப் பாதுகாக்க நிரந்தரத் தீர்வைப் பெற்றுக் கொள்ள உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதற்கமைய அரசியல்வாதிகள் பொது அமைப்புகள் ஒன்றிணைந்து மேற்கொண்டு எடுத்த நடவடிக்கையின் காரணமாக இப்பிரச்சினைக்கு தற்காலிகத் தீர்வு காணப்பட்டதுடன் பாதிப்படைந்த பகுதிகளுக்கு பெருமளவான மண்மூடைகள் அடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், புதிய ஜனாஸா நல்லடக்கத்திற்கான காணியொதுக்கீடு தொடர்பிலே இன்று பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad