தனது சொந்த குடிமக்களை சுட்டுக் கொன்றவனாக நான் தரம் தாழ்ந்து செல்ல விரும்பவில்லை - பதவியை ராஜினாமா செய்தார் கிர்கிஸ்தான் ஜனாதிபதி - News View

Breaking

Post Top Ad

Thursday, October 15, 2020

தனது சொந்த குடிமக்களை சுட்டுக் கொன்றவனாக நான் தரம் தாழ்ந்து செல்ல விரும்பவில்லை - பதவியை ராஜினாமா செய்தார் கிர்கிஸ்தான் ஜனாதிபதி

கிர்கிஸ்தானில் தேர்தல் முடிவுகளுக்கு எதிராக எதிர்க் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், ஜனாதிபதி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கிர்கிஸ்தானில் சமீபத்தில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதேசேமயம் ஜனாதிபதி சூரோன்பாய் ஜீன்பெகோவின் கூட்டணி கட்சிகளான 4 கட்சிகள் மட்டுமே 7 சதவீத வாக்குகளை பெற்று பாராளுமன்றத்துக்குள் நுழைவதற்கான தகுதியைப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

இதனால் தேர்தலில் போட்டியிட்ட மற்ற 12 கட்சிகளும் கடும் அதிர்ச்சி அடைந்தன. தேர்தல் முடிவுகளை ரத்து செய்யக் கோரி எதிர்க் கட்சியினர் போராட்டத்தில் குதித்தனர். அவர்களுடன் பொதுமக்களும் கைகோர்த்ததால் போராட்டம் பெரிய அளவில் வெடித்தது. 

சில இடங்களில் போராட்டக் காரர்களுக்கும் பொலிசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தலைநகர் பிஷ்கெக்கில் உள்ள பாராளுமன்ற கட்டிடத்தை போராட்டக்காரர்கள் சூறையாடினர். மேலும் அதே வளாகத்தில் அமைந்துள்ள ஜனாதிபதியின் அலுவலகத்துக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்து ஆவணங்களை கிழித் தெறிந்தனர். ஜனாதிபதி சூரோன்பாய் ஜீன்பெகோவ் பதவி விலக வேண்டும் என்றும் எதிர்க் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.

இதனால் பதவி விலகப் போவதாக ஜனாதிபதி சூரோன்பாய் ஜீன்பெகோவ் கடந்த வாரம் கூறினார். ஆனால் அவர் ராஜினாமா செய்யாமல் தாமதம் செய்தார். புதிய தேர்தல் நடைபெறும் வரை பதவியில் நீடிக்கப் போவதாக கூறினார். இதனால் போராட்டம் நீடித்தது.

இந்த பதற்றமான சூழலுக்கு மத்தியில், ஜனாதிபதி சூரோன்பாய் ஜீன்பெகோவ் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். எதிர்ப்பாளர்கள் பாராளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்தினால் வன்முறை வெடிக்கக் கூடும் என்று அஞ்சுவதாகவும் ஜனாதிபதி கூறி உள்ளார்.

‘ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படையினர் அரசு சொத்துக்களை பாதுகாப்பதற்கு தங்கள் ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அப்படி நடந்தால் ரத்தம் சிந்துவது தவிர்க்க முடியாது. எனவே, ஆத்திரமூட்டும் செயல்களுக்கு இடம் அளித்துவிடக் கூடாது என்று இரு தரப்பினரையும் கேட்டுக் கொள்கிறேன். 

கிர்கிஸ்தானின் வரலாற்றில் ரத்தம் சிந்திய மற்றும் தனது சொந்த குடிமக்களை சுட்டுக் கொன்ற ஜனாதிபதியாக நான் தரம் தாழ்ந்து செல்ல விரும்பவில்லை’ என்றும் ஜனாதிபதி தனது அறிக்கையில் கூறி உள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad