விளை நிலங்களை விடுவித்து விவசாய நடவடிக்கைகளை ஊக்குவிக்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 20, 2020

விளை நிலங்களை விடுவித்து விவசாய நடவடிக்கைகளை ஊக்குவிக்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை

கிளிநொச்சி மாவட்டத்தில் வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு திணைக்களங்களினால் கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்ற விளை நிலங்களை விடுவித்து விவசாய நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை எடுத்துள்ளார். 

இது தொடர்பான விசேட கலந்துரையாடல் வன ஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்னாயக்கவுக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையில் நேற்று(19) வனப் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சரும் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா, 

கிளிநொச்சி, வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் யுத்த காலத்தில் விவசாய நடவடிக்கைகள் கைவிடப்பட்டிருந்தமையினால் காடுகளாக மாறியிருக்கின்ற ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர் செய்கை நிலங்கள் யுத்தம் நிறைவடைந்த பின்னர் வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு திணைக்களங்களினால் கையகப்படுததப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

யுத்த காலத்திற்கு முன்னர் பல்வேறு திட்டங்களின் அடிப்படையில் அரச காணிகள் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு அவர்களினால் தொடர்ச்சியாக பல ஆண்டுகள் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், காணி உரித்தை உறுதிப்படுத்தக்கூடிய அத்தாட்சிப்பத்திரங்கள் இல்லாத காரணத்தினாலும், சம்மந்தப்பட்ட திணைக்களங்களின் புதிய வரையறைகள் காரணமாகவும் பெருமளவான பயிர் செய்கை நிலங்களை பிரதேச விவசாயிகள் இழந்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

அந்த வகையில், கிளிநொச்சி மாவட்டத்தில் ஜெயபுரம், ஆனைவிழுந்தான், மலையாள புரம் போன்ற பிரதேசங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பூர்வீக விவசாய நிலங்கள் வன ஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு திணைக்களங்களினால் கையகப்படுத்தப்பட்டுள்ளமையினால், அவை விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை கடற்றொழில் அமைச்சர் குறித்த சந்திப்பின்போது முன்வைத்தார்.

அத்துடன், தற்போதைய அரசாங்கம் சுய பொருளாதாரத்தை இலக்காக கொண்டு செயற்பட்டு வருகின்ற நிலையில், நீர்வேளாண்மையை விருத்தி செய்வதற்கு கடற்றொழில் அமைச்சினால் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையினால், வன ஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு திணைக்களங்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற காணிகளில் பொருத்தமானவற்றை நீர்வேளாண்மை செயற்பாட்டிற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்தார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட அமைச்சர் சி.பி.ரத்னாயக்கா, சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி சாதகமான நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளார்.

No comments:

Post a Comment