நாட்டை முடக்காது சகலவித முன்னேற்பாடுகளும் முன்னெடுப்பு - மக்களது பூரண ஒத்துழைப்புடன் தொற்றை கட்டுப்படுத்த அரசு உச்சக்கட்ட நடவடிக்கை : அமைச்சர் ரமேஸ் பத்திரன - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 13, 2020

நாட்டை முடக்காது சகலவித முன்னேற்பாடுகளும் முன்னெடுப்பு - மக்களது பூரண ஒத்துழைப்புடன் தொற்றை கட்டுப்படுத்த அரசு உச்சக்கட்ட நடவடிக்கை : அமைச்சர் ரமேஸ் பத்திரன

கொரோனா வைரஸ் நெருக்கடியை உச்ச அளவில் கட்டுப்படுத்திய நாடு என்ற வகையில் தற்போது உருவாகியுள்ள சூழ்நிலையிலும் உரியவாறு கட்டுப்படுத்த முடியுமென்ற நம்பிக்கை அரசாங்கத்திற்கு உள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஸ் பத்திரன தெரிவித்தார்.

தற்போது உருவாகியுள்ள வைரஸ் தொற்று சூழ்நிலையை கட்டுப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உச்ச அளவில் அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர், மக்கள் அஞ்சத்தேவையில்லை என்றும் தெரிவித்தார்.

அதேவேளை, நாட்டை முடக்காமல் பொருளாதாரம் மற்றும் சமூக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய தேவையுள்ளதால் நிலைமையை கருத்திற்கொண்டு நாட்டு மக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென்று அவர் தெரிவித்தார்.

மக்கள் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவதுடன் பொறுப்புடன் நடந்து முழுமையான ஒத்துழைப்பை அரசாங்கத்திற்கு வழங்கவேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார். 

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்றைய தினம் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவும் அது தொடர்பில் கருத்துக்களைத் தெரிவித்ததுடன் அமைச்சர் ரமேஸ் பத்திரன மேலும் தெரிவிக்கையில்,

இதற்கு முன்னர் நாட்டில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் சூழ்நிலை உருவாகியபோது அரசாங்கம் 60 இலட்சம் குடும்பங்களுக்கு சுமார் 60 பில்லியன் நிதியை நிவாரணமாக வழங்கியது.

அரசாங்கம் என்ற வகையில் நாட்டு மக்களுக்கு விடுக்கும் அறிவிப்பு சுகாதார துறையினரின் வழிகாட்டல்களை பின்பற்றி செயற்பட வேண்டுமென்பதே குறிப்பாக நாட்டை முடக்கி பொருளாதாரம் மற்றும் சமூக நடவடிக்கைகளை மேற்கொள்வது மிக அவசியமாகவுள்ளது. 

எதிர்வரும் காலங்களில் மக்கள் தனித்தனியே தத்தமது சுகாதார நிலைமைகளில் கவனம் செலுத்த வேண்டும். சமூக இடைவெளி பின்பற்றப்படுவதுடன் சுகாதார துறையினர் மற்றும் அரசாங்கம் விடுக்கும் ஆலோசனைகளை முறையாக கடைப்பிடிப்பது அவசியமாகும்.

மினுவாங்கொடை மற்றும் திவுலப்பிட்டிய பிரதேசங்களில் குறித்த தொழிற்சாலை சம்பந்தப்பட்ட தரப்பினர் தொடர்பில் கவனம் செலுத்தி வருவதுடன் வைரஸ் தொற்று உருவாகியமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கென அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தொழில் ஆணையாளரின் தலைமையில் குழுவொன்றை நியமித்துள்ளார். நாம் அதன் ஆரம்பத்தை இனங்கண்டுகொள்ள முடியும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது. 

தற்போது இனங்காணப்பட்டுள்ள வைரஸ் தொற்று நோயாளர்களின் பெரும்பாலானோர் உரிய கொத்தணிகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்பதை சுகாதார மற்றும் பாதுகாப்புத் துறையினர் தெளிவாக இனங்கண்டுள்ளனர்.

கடந்த 13ஆம் திகதி வரை முழு தொற்றாளர்களின் எண்ணிக்கை 1397 ஆகும். தற்போது மேற்படி கொத்தணி சூழலில் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் இதுவரை 24,778 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தற்போது தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 10,281 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். தினமும் 7,000 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

26 வைத்தியசாலைகளில் வைரஸ் தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான சகல வசதிகளையும் அரசாங்கம் பெற்றுக் கொடுத்துள்ளது. அரசாங்கம் மேற்படி நிலைமை முகாமைத்துவம் செய்வதற்கு உச்சளவு பங்களிப்பை செய்கிறது. அதனால் மக்கள் அஞ்சத் தேவையில்லை என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment