மக்களின் அலட்சியப் போக்கிற்கு அரசாங்கத்தின் பொய்ப் பிரசாரமே காரணம் : லக்ஷ்மன் கிரியெல்ல - News View

About Us

About Us

Breaking

Friday, October 9, 2020

மக்களின் அலட்சியப் போக்கிற்கு அரசாங்கத்தின் பொய்ப் பிரசாரமே காரணம் : லக்ஷ்மன் கிரியெல்ல

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்) 

கொரோனா தொற்று அச்சம் நாட்டில் இல்லை என அரசாங்கம் பிரசாரம் செய்து வந்ததனாலேயே மக்கள் அது தொடர்பில் அலட்சியமாக இருந்தனர். அத்துடன் கொரோன தொற்று மக்கள் மத்தியில் பரவும் நிலைமை இல்லை என சுகாதார அமைச்சரும் கடந்த ஏப்ரல் மாதம் பகிரங்கமாக தெரிவித்திருந்தார் என எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் இன்று தனிப்பட்ட தெளிவுபடுத்தல் கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். 

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டில் இன்று கொவிட்-19 இரண்டாம் அலைக்கு நாங்கள் அனைவரும் முகம்கொடுத்து வருகின்றோம். ஆனால் கொவிட் தொற்று முழுமையாக கட்டுப்படுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி ஊடகங்களில் தெரிவித்திருந்தார். 

இது தொடர்பாக கடந்த 7ஆம் திகதி பாராளுமன்றத்தில் நான் தெரிவித்தபோது, சுகாதார அமைச்சர் அதனை மறுத்ததுடன், அவ்வாறு தான் தெரிவித்திருந்தால் அதனை காட்டுமாறு எனக்கு சவால் விடுத்திருந்தார். 

அதன் பிரகாரம் சுகாதார அமைச்சர் கடந்த மாதம் 3ஆம் திகதி சிறிலங்கா ராணுவத்தின் ஊடகத்தின் யூடியுப் அலைவரிசையில் தெரிவித்திருந்த உரையை முன்வைக்கின்றேன். அதில் அவர், கொவிட்-19 தொற்று இன்று முழு உலகத்திலும் சமூகங்களுக்கிடையில் பரவியுள்ள நோயாகும். ஆனால் இந்த நோய் சமூகத்துக்குள் பரவுவதை முழுமையாக இல்லாமலாக்கிய உலகில் இருக்கும் ஒரே நாடு இலங்கையாகும் என நான் நம்புவதாக குறிப்பிட்டிருந்தார். 

அதேபோன்று கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி லங்கா சீ ஊடகத்தக்கு தெரிவிக்கையில், கொரோனா தொற்று இந்த நாட்டு மக்கள் மத்தியில் பரவும் நிலை இல்லை எனவும் மக்கள் மத்தியில் தொற்றும் நிலை இல்லை எனவும் குறிப்பிட்டிருந்தார். 

ஆனால் கொரோனா தொற்று சம்பூரணமாக கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை எனவும் தொடர்ந்து மக்கள் சுகாதார வழிமுறைகளை பேணி செயற்பட வேண்டும் எனவும் வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் சுகாதார மேம்பாட்டு பணியகம் என்பன தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வந்திருந்தன. 

இருந்தபோதும் அரசாங்கம் தேர்தலை நடத்துவதற்காக கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக பொய் பிரசாரங்களை மேற்கொண்டு வந்தது. அதனால்தான் மக்களும் கொவிட் தொடர்பில் அலட்சியமாக செயற்பட்டு வந்தனர். அதன் பின்விளைவாகேவே தற்போது நாங்கள் இரண்டாம் அலைக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றோம் என்றார்.

No comments:

Post a Comment