இலங்கை போக்குவரத்துச் சபை பஸ் நடத்துனருக்கு கொரோனா! - News View

About Us

About Us

Breaking

Sunday, October 18, 2020

இலங்கை போக்குவரத்துச் சபை பஸ் நடத்துனருக்கு கொரோனா!

பருத்தித்துறையைச் சேர்ந்த இலங்கை போக்குவரத்துச் சபை நடத்துனர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். 

கடந்த 3ஆம் திகதி கொழும்பிலிருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்த இ.போ.ச. பேருந்தின் நடத்துனருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உள்ளமை இன்றைய பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. 

நடத்துனர் பணியாற்றிய பேருந்தில் கடந்த 3 ஆம் திகதி கம்பஹா மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் கடமையாற்றிய புங்குடுதீவைச் சேர்ந்த பெண்ணும் பயணித்திருந்தார். அந்தப் பெண்ணுக்கு கொரோனா தொற்று உள்ளமை கடந்த 5ஆம் திகதி உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது வரை அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். 

புங்குடுதீவுப் பெண்ணுக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் புத்தளத்திலிருந்து கொடிகாமம் வரை பயணித்த பருத்தித்துறை சாலைக்குச் சொந்தமான பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த நிலையில் நடத்துனருக்கு தொற்று உள்ளமை நேற்று (18) உறுதி செய்யப்பட்டுள்ளது. 

குறித்த நடத்துனருக்கு ஏற்கனவே பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொண்டபோது அவருக்கு தொற்று இல்லை என்ற முடிவு வெளியாகியது.

எனினும் சுகாதாரப் பிரிவினர் 14 நாட்களின் பின்னர் மீண்டும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் அவரை, அவரது வீட்டில் சுய தனிமைப்படுத்தியிருந்தனர். இந்நிலையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், பருத்தித்துறை பேருந்தில் பயணித்த மேலும் பலருக்கு பரிசோதனை மேற்கொண்ட போதும் அவர்களில் தொற்று இல்லை என கடந்த சில நாட்களில் உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

இதேவேளை, இன்று வட மாகாணத்தின் பல இடங்களிலிருந்ததும் 160 பேருக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்டன. 

வவுனியா மாவட்டத்தில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த மூவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

No comments:

Post a Comment