கிழக்கில் காணிப் பிரச்சினைகளுக்கு ஐம்பது வழக்குகள் தாக்கல் செய்யப்படும் : சுமந்திரன் - News View

Breaking

Sunday, October 18, 2020

கிழக்கில் காணிப் பிரச்சினைகளுக்கு ஐம்பது வழக்குகள் தாக்கல் செய்யப்படும் : சுமந்திரன்

"கிழக்கில் அரசாங்கம் நிலம் சம்பந்தமாக பலவித அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றது. அதனால் கிழக்கு மாகாணத்தில் இன்று நிலப்பிரச்சினை பூதாகரமாக எழுந்துள்ளது. அவற்றுக்கெதிராக சுமார் 50 வழக்குகளைத் தாக்கல் செய்யவிருக்கிறோம்."

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் காரைதீவில் வைத்துத் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தரும் காரைதீவு பிரதேச சபைத் தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறிலின் அழைப்பின்பேரில் நேற்றுமுன்தினம் காரைதீவுக்கு விஜயம் செய்த அவர் ஊடகத்திற்கு கருத்துத் தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்டச் செயலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது. அச்சமயம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசனும், காரைதீவு பிரதேச சபை உறுப்பினர்களான த.மோகனதாஸ் திருமதி சி.ஜெயராணி மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞரணி உபசெயலாளருமான அ.நிதான்சனும் சமுகமளித்திருந்தனர்.

அங்கு சுமந்திரன் மேலும் கருத்துரைக்கையில் "கிழக்கில் அரசாங்கம் நிலம் சம்பந்தமாக பலவித அழுத்தங்களைப் பிரயோகிக்கிறது. இந்த இடத்தில் ஜனநாயகக் கட்டமைப்புகளை தொடர்ச்சியாகப் பேண வேண்டியது எமது கடமையாகும். இன்று பொத்துவிலுக்குச் செல்கிறேன். அங்கிருக்கும் முஸ்லிம்களின் காணிப்பிரச்சினை ஒன்றுக்காக. இவ்வாறு பல பிரச்சினைகள் உள்ளன.

அதேபோன்று திருகோணமலை திரியாய காணிப்பிரச்சினை மட்டக்களப்பு எல்லைக்காணி பிரச்சினை என நிறையப் பிரச்சினைகள் உள்ளன. இதில் தொல்பொருளியல் வனப்பாதுகாப்பு என பலதரப்பினர் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர்.

முன்பு வடக்கில் இராணுவத்தினர் தமிழ் மக்களின் காணிகளை கையகப்படுத்தினர். அதற்கெதிராக நிறைய வழக்குகளைபோட்டு தீர்வுகண்டோம். அதேபோன்று இன்று கிழக்கிலும் குறைந்தது 50 தொடக்கம் 100 வழக்குகளை வைக்க வேண்டும்."

(சகாதேவராஜா)

No comments:

Post a Comment