தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை வெற்றிகரமாக நடைபெற்றதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடு பூராகவும் அமைக்கப்பட்டிருந்த இரண்டாயிரத்து தொள்ளாயிரத்து 36 மத்திய நிலையங்களில் இந்த பரீட்சை நடைபெற்றது.
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் பிரதேசங்களில் விசேட பரீட்சை நிலையங்கள் 12 அமைக்கப்பட்டிருந்தன. கம்பஹா மாவட்டத்தில் உள்ள மாணவர்களுக்கு விசேட போக்குவரத்து ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இன்று காலை 9.30 க்கு பரீட்சை ஆரம்பமானது. சகல மாணவர்களும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி பரீட்சைக்கு வருகை தந்ததாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
கொரோனா மற்றும் கொட்டும் மழையினையும் பொருட்படுத்தாது மலையகத்தில் உள்ள தரம் ஐந்து புலமைப்பரிசில் மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றினர்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும், கொட்டும் மழையினூடான கடும் காற்று, குளிர் ஆகியன பொருட்படுத்தாது மலையக மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றினர்.
இன்று (11.10.2020) காலை 9.30 மணிக்கு ஆரம்பமான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு காலை 8.00 மணிக்கு முதல் மாணவர்கள் தங்களின் பெற்றோர்களுடன் மிகவும் உற்சாகமாக வருகை தந்திருந்தனர்.
தரம் ஐந்து புலமைப்பரிசில் நடைபெறும் சகல பாடசாலைகளிலும் சுகாதார அறிவுரைகளுக்கமைவாக நேற்றையதினம் (10.10.2020) தொற்று நீக்கம் செய்யப்பட்டன.
அட்டன் கல்வி வலயத்தில் 43 பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டது. இதில் 3788 மாணவர்கள் பரீட்சை எழுதியுள்ளனர். தமிழ் மொழி மூலம் 2181 மாணவர்களும், சிங்கள மொழி மூலம் 1607 மாணவர்களும் பரீட்சை எழுத அனுமதியை பெற்றிருந்தனர்.
நுவரெலியா கல்வி வலயத்தில் 36 பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தமிழ் மொழி மூலம் 3300 மாணவர்களும், சிங்கள மொழி மூலம் 850 மாணவர்களும் பரீட்சை எழுத அனுமதி பெற்றிருந்தனர்.
No comments:
Post a Comment