பாதுகாப்பாக இடம்பெற்றது தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, உயர் தரப் பரீட்சைக்கும் பயமின்றி மாணவர்களை அனுப்புங்கள் - கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, October 11, 2020

பாதுகாப்பாக இடம்பெற்றது தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, உயர் தரப் பரீட்சைக்கும் பயமின்றி மாணவர்களை அனுப்புங்கள் - கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவிப்பு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று (11) எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் நடைபெற்றுள்ளதோடு, இதேபோன்று நாளையதினம் (12) க.பொ.த. உயர்தரப் பரீட்சைகளை எழுத மாணவர்களை அனுப்பி வைக்குமாறு, கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

பரீட்சை இடம்பெறும் இடங்களை ஆய்வு செய்ய கொழும்பு டி.எஸ். சேனாநாயக்க கல்லூரிக்கு விஜயம் செய்த அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் கருத்து வெளியிட்ட அமைச்சர், அரசாங்கத்தை நம்பி, தங்கள் குழந்தைகளை பரீட்சைகளுக்கு அனுப்பி வைத்த அனைத்து பெற்றோர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். 

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, எவ்வித பிரச்சினைகளும் இன்றி வெற்றிகரகமாக முன்னெடுக்கப்பட்டிருந்தது. இது தொடர்பில் பெற்றோர்கள் எங்களை தொடர்பு கொண்டு அரசாங்கதிற்கு நன்றி தெரிவித்தனர். அது குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்டிருந்த பரீட்சையை, ஒத்தி வைக்க வேண்டாம் என்று பெற்றோர் அரசை வலியுறுத்தினர். இந்த சவாலை சமாளிக்க சுகாதாரம், பாதுகாப்பு, போக்குவரத்து, கல்வி மற்றும் உள்ளூராட்சி அமைப்புகளின் ஒத்துழைப்புடன் இணைந்து பணியாற்றியதன் மூலம் அரசாங்கம் அச்சவாலை வெற்றி கொள்ள முடிந்துள்ளது.

க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் நாளை (12) முதல் நவம்பர் 06 வரை நடாத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. எனவே எந்த தயக்கமும் இல்லாமல் மாணவர்களை பரீட்சைகளுக்கு அனுப்புங்கள்.

அத்துடன், சுகாதார அமைச்சர், அனைத்து சுகாதாரத் துறைகள், கல்வி அமைச்சின் செயலாளர் உட்பட அனைத்து ஊழியர்கள், அனைத்து உள்ளூராட்சி சபைகள், பரீட்சை ஆணையாளர் உள்ளிட்ட பணியாளர்கள் மற்றும் அனைத்து பாதுகாப்புப் படையினரும் அவர்களின் பங்களிப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு நன்றி தெரிவிப்பதாக அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

2020 க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் ஒக்டோபர் 12ஆம் திகதி முதல் நவம்பர் 06ஆம் திகதி வரை, நாடு முழுவதிலுமுள்ள 2,648 பரீட்சை நிலையங்களில் இடம்பெறவுள்ளன.

இப்பரீட்சைக்கு தோற்றுவதற்காக, நாடு முழுவதிலுமிருந்து 362,824 பரீட்சார்த்திகள் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இம்முறை க.பொ.த. உயர் தர பரீட்சைக்கு விண்ணப்பித்த மாணவர்களில், இதுவரை பரீட்சைக்கான அனுமதி அட்டை கிடைக்காதோர், பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான, www.doenets.lk அல்லது நேரடியாக www.slexams.com எனும் தளத்திலிருந்து அதனை தரவிறக்கிக் கொள்ளுமாறு பரீட்சைகள் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

No comments:

Post a Comment