சிறுபான்மை சமூகங்களின் விடிவுக்காக பாடுபடுகின்ற தலைவனை அடக்கி ஒடுக்க நினைப்பதை வன்மையாக கண்டிக்கின்றோம் - அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் - News View

Breaking

Post Top Ad

Friday, October 16, 2020

சிறுபான்மை சமூகங்களின் விடிவுக்காக பாடுபடுகின்ற தலைவனை அடக்கி ஒடுக்க நினைப்பதை வன்மையாக கண்டிக்கின்றோம் - அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

சிறுபான்மை சமூகங்களின் விடிவுக்காக பாடுபடுகின்ற தலைவனை அடக்கி ஒடுக்க நினைப்பதை நாம் வன்மையாக கண்டிப்பதாக முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரசின் முக்கியஸ்தர்கள் தெரிவித்தனர். 

குறித்த விடயம் தொடர்பாக வவுனியா தனியார் விருந்தினர் விடுதியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள், முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதினை கைது செய்ய வேண்டும் என்பதற்காக பல விடயங்கள் இடம்பெற்று வருகின்றன. 

அந்த வகையில் அரசு உட்பட பாதுகாப்பு தரப்புகளிற்கு நாம் ஒரு விடயத்தை சொல்லிக் கொள்கின்றோம். அவர் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு பிரதிநிதி. அவர் ஏதேனும் பிழைகள் அல்லது சட்டவிரோதமான செயற்பாடுகளை செய்திருந்தால் அது தொடர்பாக அவரை விசாரிப்பதற்கு உரிமை இருக்கிறது. 

ஆனால் அவரது பக்கத்தில் நியாயம் இருக்கின்ற போது, அவர் உரிய விடயங்களிற்கு பதில் அளித்து கொண்டிருக்கின்ற போது அவரை சிறையில் அடைத்துதான் அடுத்த விடயத்தை பார்ப்போம் என்ற நிலைப்பாட்டை நாம் வன்மையாக கண்டிப்பதுடன் அவரை சிறையில் தள்ளிவிட்டு குற்றமற்றவர் என்று விடுவிக்கும் இந்த கலாசாரத்தையும் நிறுத்துங்கள் என்று கோருகின்றோம். 

அவர் 15 வருடத்திற்கும் மேலாக பாராளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருந்துள்ளார். சமயம் மொழி பாராமல் பல்வேறு உதவிகளை இந்த நாட்டிற்கும் மக்களுக்கும் வழங்கியுள்ளார். அவர் யாருக்கும் அநியாயம் செய்தவர் அல்ல. எனவே அவரை சிறையில் தள்ளி குற்றவாளி ஆக்க முயல்வதை நாம் ஏற்க முடியாது. 

அவர் இந்தநாட்டிற்கு தேவையானவர், ஒரு இனத்தின் தலைவனாக பார்க்கப்பட்ட அவரை அவதூறாக காட்டி அவரது தலைமைத்துவத்தை ஒழிப்பதற்காக பலர் செயற்படுகின்றனர். இந்த நாட்டின் சிறுபான்மை சமூகம் மீது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் இவ்வாறான செயற்பாட்டை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். 

இந்தநாட்டில் இடம்பெயர்ந்த மக்கள் வெவ்வேறு மாவட்டங்களில் வசித்திருந்தால் அவர்களை சொந்த இடங்களுக்கு அனுப்பி வாக்களிப்பதற்கான ஏற்பாட்டை செய்வது அரசாங்கத்தின் கடமை. அவ்வாறான ஒரு செயற்பாட்டையே அவர் செய்திருந்தார். 

அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் ஒப்புதலுடன்தான் இவ்வாறான விடயங்கள் நடந்தது. எனவே சிறுபான்மை சமூகங்களின் விடிவுக்காக பாடுபடுகின்ற தலைவனை அடக்கி ஒடுக்க நினைப்பதை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். என்றனர். 

ஊடக சந்திப்பில் கட்சியின் முக்கியஸ்தர்களான முத்து முகம்மது, முனாயித் மௌலவி, நகர சபை உறுப்பினர்களான அப்துல் பாரி, முகமது லரீப் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad