மோடியின் 'ஜல் ஜீவன் திட்டத்தை' இணைந்ததாக இலங்கைக்கும் ஒரு திட்டம் - இந்திய உயர்ஸ்தானிகர் பிரதமரிடம் எடுத்துரைப்பு - News View

Breaking

Post Top Ad

Friday, October 16, 2020

மோடியின் 'ஜல் ஜீவன் திட்டத்தை' இணைந்ததாக இலங்கைக்கும் ஒரு திட்டம் - இந்திய உயர்ஸ்தானிகர் பிரதமரிடம் எடுத்துரைப்பு

(நா.தனுஜா) 

இந்தியாவின் அனைத்து வீடுகளுக்கும் தூய நீரை வழங்கும் நோக்கில் பிரதமர் மோடியினால் முன்னெடுக்கப்பட்டு வரும் 'ஜல் ஜீவன் திட்டத்துடன்' (வாழ்விற்கு நீர் திட்டம்) இணைந்ததாக ஒரு திட்டத்தை இலங்கையில் முன்னெடுப்பதன் ஊடாக நாட்டில் நிலவும் தூய குடிநீர் பற்றாக்குறைப் பிரச்சினைக்குத் தீர்வுகாணக் கூடியதாக இருக்கும் என்று இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் எடுத்துரைத்திருக்கிறார். 

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே நேற்று வியாழக்கிழமை அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடினார். 

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் கடந்த மாதம் நடைபெற்ற இணையவழி மாநாட்டில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய்வது இந்த சந்திப்பின் அடிப்படை நோக்கமாக அமைந்திருந்தது. 

மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்றுக் கொண்டதன் பின்னர் இந்தியப் பிரதமருடனேயே முதலாவதாக இணையவழி மாநாட்டில் கலந்துகொண்டிருந்தார். அந்த மாநாடு தொடர்பான தமது திருப்தியை இச்சந்திப்பின் போது இரு தரப்பினரும் வெளிப்படுத்தினர். 

மேலும் இதன்போது நீர் விநியோகம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பில் தாம் முக்கியத்துவம் வழங்குவதாக பிரதமர் இந்திய உயர்ஸ்தானிகரிடம் எடுத்துரைத்தார். 

பாடசாலைகளுக்கு நீர் வழங்கல், உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தல், மழைநீர் சேகரிப்பு, பின்தங்கிய பிரதேசங்களில் கழிப்பறைகளை நிர்மாணித்தல், இயற்கை உரம் தயாரிப்பு உள்ளடங்கலாக இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயலாற்றக் கூடிய துறைகள் குறித்து இதன்போது உயர்ஸ்தானிகர் பாக்லே எடுத்துரைத்தார். 

அவருக்குப் பதிலளித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நாட்டின் குறித்த சில பகுதிகளில் பாதுகாப்பான சுத்தமான குடிநீருக்கு நிலவும் பற்றாக்குறையும் அதன் விளைவாக ஏற்படுகின்ற சிறுநீரகநோய்களும் முக்கிய பிரச்சினையாக இருப்பதாக சுட்டிக்காட்டியதுடன் இதற்கான தீர்வைக் காண்பதற்கே அரசாங்கம் தற்போது முன்னுரிமை வழங்கியிருக்கிறது என்றும் தெரிவித்தார். 

இதன்போது இந்தியாவின் அனைத்து வீடுகளுக்கும் தூயநீரை வழங்கும் நோக்கில் பிரதமர் மோடியினால் முன்னெடுக்கப்பட்டிருக்கும் 'ஜல் ஜீவன் திட்டத்துடன்' (வாழ்விற்கு நீர் திட்டம்) இலங்கை தொடர்புகளை ஏற்படுத்தி செயலாற்றுவதற்கான சாத்தியப்பாடுகளை இந்திய உயர்ஸ்தானிகர் பிரதமருக்குத் தெளிவுபடுத்தினார். 

அத்தோடு இலங்கையின் மருந்தாக்கத்துறையில் விசேட கவனம் செலுத்துமாறும் அந்தத் துறையில் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தியில் ஈடுபடுவதற்கான முதலீடுகளைச் செய்வதற்கு இந்திய முதலீட்டாளர்களை ஊக்குவிக்குமாறும் பிரதமர் உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயிடம் கேட்டுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad