“என்னை பிரதான குற்றவாளியாக்குவதில் நியாயமில்லை” - ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் - News View

About Us

About Us

Breaking

Thursday, October 1, 2020

“என்னை பிரதான குற்றவாளியாக்குவதில் நியாயமில்லை” - ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர்

“கடந்த 2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தின குண்டு வெடிப்பின் பின்னர் என்னை பிரதான குற்றவாளியாக்குவதில் நியாயமில்லை. எனக்கு தகவல் துணுக்குகள் மட்டுமே வழங்கப்பட்டன” என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்யும் ஆணைக்குழு முன்னிலையில் கடந்த செப்டம்பர் 29ஆம் திகதி சாட்சியமளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“2019 ஏப்ரல் 19 ஆம் திகதி தேசிய புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜெயவர்தன இராணுவ புலனாய்வு பணிப்பாளர்கள் மற்றும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரை உடனடி தாக்குதல் குறித்து தொலைபேசியில் எச்சரித்தார். ஆனால் பாதுகாப்பு செயலாளரான எனக்கு அவ்வாறான எந்த ஒரு தகவலும் அறிவிக்கப்படவில்லை” என அவர் கூறினார்.

அந்தத் தினத்தில் அத்தகைய தகவலைப் பெற்றிருந்தால் நீங்கள் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பீர்கள் என ஆணைக்குழு உறுப்பினர்கள் சாட்சியிடம் வினவினர். 

அதற்கு அவர் அது பற்றி எனக்கு அறிவித்திருந்தால் நான் ஜனாதிபதிக்கு அழைத்து நான் இதை பிரதமரிடம் சொல்ல வேண்டுமா என அவரிடம் கேட்டிருப்பேன். அவரும் என்ன பதில் சொல்லியிருப்பார் என எனக்குத் தெரியும். ஆனால் குறைந்தது ஊரடங்கு சட்டம் விதிக்கப்பட வேண்டும் என்றாவது ஜனாதிபதியிடம் கூறியிருப்பேன்.

தாக்குதலுக்கு முதல் நாளான 2019 ஏப்ரல் 20 அன்று நிலந்த ஜெயவர்தன உங்களுக்கு ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தவிர்க்க முடியாதது என அறிவித்திருந்தும் ஏன் நீங்கள் தகவல் தொடர்பான நடவடிக்கையை எடுக்கவில்லை என ஆணைக்குழு உறுப்பினர்கள் ஹேமசிறியிடம் வினவினர்.

அதற்கு அவர் தான் அந்த வேளையில் அதிர்ச்சியடைந்திருந்ததாகக் கூறினார். “இதன் பின் எதையாவது செய்வதற்கு நேரம் போதாமல் இருப்பதாக எனது புத்தி எனக்குக் கூறியது. நான் நிலந்த ஜெயவர்தனவிடம் என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டேன். பொலிஸ் மா அதிபருக்கும் தொலைபேசியில் அழைத்து அறிவித்தேன்” என அவர் கூறினார்.

“தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் தலைவர் சஹ்ரான் ஹாசிம் மற்றும் அவரது குழுவினர் குண்டுத் தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்கு முன்பே கொழும்பு வந்திருந்ததுடன் பாதுகாப்பு படையினர் அவர்களில் எவரையும் அடையாளம் காணவில்லை” எனவும் அவர் தெரிவித்தார்.

தினக்குரல்

No comments:

Post a Comment