பாரம்பரிய காணியில் விவசாயம் செய்ய வன ஜீவராசிகள் திணைக்களம் தடை - வெருகல் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் குற்றச்சாட்டு - News View

About Us

About Us

Breaking

Monday, October 12, 2020

பாரம்பரிய காணியில் விவசாயம் செய்ய வன ஜீவராசிகள் திணைக்களம் தடை - வெருகல் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் குற்றச்சாட்டு

திருமலை வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் பொதுமக்கள் தமது பாரம்பரிய காணிகளில் விவசாய நடவடிக்கை மேற்கொள்ளும்போது வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தடுப்பதாக திருகோணமலை - வெருகல் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டடுள்ளது.

பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்றுக் காலை இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்திற்கு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கபில அத்துக்கொரல தலைமை தாங்கினார்.

பொதுத் தேர்தல் முடிவடைந்து புதிய அரசாங்கம் வந்ததன் பின்னர் நடைபெறும் முதலாவது வெருகல் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வெருகல் பிரதேச செயலாளர் க.குணநாதன், வெருகல் பிரதேச சபையின் தவிசாளர் க.சுந்தரலிங்கம், அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் பொதுமக்கள் தமது பாரம்பரிய காணிகளில் விவசாய நடவடிக்கை மேற்கொள்ளும்போது வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தடுக்கின்ற விடயம், வெருகல் ஆற்றில் கடல் நீர் களப்பதால் சோளம், கச்சான் செய்கையாளர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள், சுகாதார, கல்வி, விவசாய, அபிவிருத்தி விடயங்களில் வெருகல் பிரதேச செயலகப் பிரிவின் நிலை போன்றனவும் ஆராயப்பட்டது.

இவ்விடயம் தொடர்பில் தான் கவனத்தில் கொண்டு நடவடிக்கை மேற்கொள்வதாகவும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கபில நுவான் அத்துக்கொரல தெரிவித்தார்.

த.ரூபன், ஈச்சிலம்பற்று நிருபர்

No comments:

Post a Comment