(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
கொவிட்-19 வைரஸ் பரவல் நாட்டில் சமூக பரவலாக மாறிவிட்டது. இது மிகவும் மோசமான நிலைமையை உருவாக்கும், எனினும் அரசாங்கம் உண்மைகளை மூடி மறைக்கின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் குற்றம் சுமத்திய போதிலும் அதனை முழுமையாக நிராகரித்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, கொரோனா வைரஸ் பரவல் சமூக பரவலாக மாறவே இல்லை, என அடித்துக் கூறினார்.
இதனை அடுத்து சுகாதார அமைச்சருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையில் சபையில் கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றது.
பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை சபை அமர்வுகளின்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரவல் குறித்த அச்சுறுத்தல் நிலைமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும், ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயகவும் கேள்வி எழுப்பினர்.
இதன்போது ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய எதிர்க்கட்சி தலைவர், சஜித் பிரேமதாச கூறுகையில் நேற்றைய தினம் பிங்கிரிய, குளியாபிடிட, துமலசூரிய பிரதேசத்தில் கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளது. கொத்தனியா இல்லாது இது சமூக பரவலாக மாற்றமடைந்துள்ளது. இந்த நிலைமைகள் ஆரோக்கியமானதள்ள. எனவே பரிசோதனைகளை துரிதப்படுத்த வேண்டும். வைரஸ் பரவல் கொத்தணியில் இருந்து விடுபட்டு சமூக பரவலாக மாற்றமடைவது ஆரோக்கியமான விடயமல்ல என சபையில் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இது குறித்து தெளிவான விளக்கம் ஒன்றினை நேற்றும் சமையில் முன்வைத்துள்ளேன். எனினும் மீண்டும் கூறுகிறேன், கொரோனா வைரஸ் பரவல் சமூக பரவலாக மாற்றமடையவில்லை. தொற்று நோய் தடுப்பு பிரிவும் தொடர்ச்சியாக இதே நிலைமைகளை கூறியுள்ளனர். தொற்று நோய் தடுப்பு பிரிவும், சுகாதார அமைச்சும் மிக திறைமையாகவும் துரிதமாகவும் செயற்பட்டு வருகின்றனர்.
உதாரணமாக கூறுவதென்றால் எதிர்க்கட்சித் தலைவர் யால வனத்தில் விடுதி ஒன்றில் இருந்த வேளையில் அதே விடுதியில் நபர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்ட வேளையில் அவருடன் தொடர்புபட்ட இரண்டாம் தரப்பு நபராக எதிர்க்கட்சித் தலைவர் அடையாளம் காணப்பட்டார். அவருக்கான சுகாதார வழிமுறைகளை கடைப்பிடிக்க துரிதமாக எமது சுகாதார அதிகாரிகள் செயற்பட்டனர். எதிர்க்கட்சித் தலைவருக்கும் அறிவித்தோம். ஆலோசனைகளை வழங்கினோம்.
எனவே இதனை விடவும் நல்ல உதாரணம் வேறெதுவும் இருக்க முடியாது. அந்த சம்பவத்தில் இரண்டாம் தரப்பு நபராக எதிர்க்கட்சித் தலைவரே அடையாளம் காணப்பட்டார். எவ்வாறு இருப்பினும் வைரஸ் பரவல் சமூக பரவலாக மாறவில்லை, நிலைமைகள் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதே உண்மையாகும். என்றார்.
No comments:
Post a Comment