மட்டக்களப்பு பறவைகள் சரணாலயத்தில் அழிவை ஏற்படுத்தும் தீ : கட்டுப்படுத்தும் பணிகள் தீவிரம், நான்கு ஏக்கர் பகுதி தீக்கிரை - News View

Breaking

Post Top Ad

Friday, October 16, 2020

மட்டக்களப்பு பறவைகள் சரணாலயத்தில் அழிவை ஏற்படுத்தும் தீ : கட்டுப்படுத்தும் பணிகள் தீவிரம், நான்கு ஏக்கர் பகுதி தீக்கிரை

மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட இயற்கை பறவைகள் சரணாலயம் உள்ள பகுதியில் ஏற்பட்ட தீயினைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மட்டக்களப்பு மாநகர சபையின் நுழைவாயிலில் பிள்ளையாரடி-கொக்குவில் பகுதியில் உள்ள இயற்கை பறவைகள் சரணாலயம் பகுதியிலேயே இந்த தீ ஏற்பட்டுள்ளது. இன்று முற்பகல் 11.30 அளவில் சரணாலயத்தில் தீ பரவியுள்ளது.

குறித்த பகுதியானது நீண்ட நிலப்பரப்பினைக் கொண்டதுடன் சதுப்பு நிலங்களையும் கொண்ட பகுதியாகவும் உலகின் பல பாகங்களில் இருந்து ஒவ்வொரு காலநிலைக்கும் இங்கு பலவிதமான பறவைகள் வந்து செல்கின்றன.

அண்மைக் காலமாக இப்பகுதியினை ஆக்கிரமிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் அரசாங்கத்தினால் இப்பகுதி பறவைகள் சரணாலயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அதனையும் மீறி அப்பகுதியில் அத்துமீறிய செயற்பாடுகள் இடம்பெற்றுவரும் நிலையில் இந்த தீவிபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தத் தீ காரணமாக சுமார் நான்கு ஏக்கருக்கு அதிகமான காடுகள் அழிந்துள்ளதுடன் தொடர்ந்து பரவும் தீயினைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைக்கும் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

தீ பரவலின்போது அங்கிருந்த பறவைகள் வேறு பகுதிகளை நோக்கிச் சென்றதுடன் குறித்த பகுதியில் இருந்த உயிரினங்கள் நீர் நிலைகளை நோக்கிச் செல்வதையும் காணமுடிந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இந்நிலையில், தொடர்ந்தும் தீயினைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

No comments:

Post a Comment

Post Bottom Ad