(ஆர்.ராம்)
முஸ்லிம் சகோதரர்களின் தேசிய கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியன அர்த்தமற்ற அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விசனம் தெரிவித்துள்ளது.
முஸ்லிம் காங்கிரஸின் தலைமை தவிர்ந்த ஏனைய நான்கு உறுப்பினர்களும் மக்கள் காங்கிரஸ் தலைமை மற்றும் ஒரு உறுப்பினர் தவிர்ந்த ஏனைய இருவரும் 20 ஐ ஆதரிக்கும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அதிர்ச்சி கலந்த வியப்பு ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், 20 ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிரணியில் உள்ள தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்ப்பினை வெளியிடுவதற்கு இணக்கம் தெரிவித்ததாக குறிப்பிட்டிருந்தார்.
குறிப்பாக தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போன்ற தரப்புக்கள் 20 ஐ நிச்சயம் எதிர்ப்போம் என்ற நிலைப்பாட்டினை கூட்டமைப்புடன் இணைந்து உறுதியாக எடுத்திருந்தாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில், 20 ஆவது திருத்தச் சட்டத்தின் மீதான வாக்கெடுப்பின்போது முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் அதற்கு ஆதரவு வெளியிட்டிருந்தனர். இவ்வாறான மாறுபட்ட நிலைப்பாடு தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏனைய தமிழ் பேசும் தரப்புக்களின் தலைவர்களுடன் ஜனநாயகத்திற்கு எதிரான 20 ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக எதிர்ப்பது என்ற அடிப்படையில் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தது. அதில் முழுமையான உடன்பாட்டினையும் எட்டியிருந்தது.
இவ்வாறான நிலையில் முஸ்லிம் காங்கிரஸின் நான்கு உறுப்பினர்களும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இரண்டு உறுப்பினர்களும் 20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பிலான வாக்கெடுப்பின் போது ஆதரவளித்தார்கள். அந்த செயற்பாடு கூட்டமைப்பிற்கு அதிர்ச்சி கலந்த வியப்பினை ஏற்படுத்தியது.
குறிப்பாக அந்த கட்சிகளின் தலைவர்கள் அளித்த வாக்குறுதிகளுக்கு அமைவாக 20 ஐ எதிர்த்திருந்தாலும் அவர்களின் உறுப்பினர்கள் மாறுபட்ட நிலைப்பாட்டினை எடுத்திருக்கின்றார்கள்.
விசேடமாக முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் நீதிமன்றில் 20 இற்கு எதிராக வழங்குத் தாக்கல் செய்து அதில் ஆஜராகியபோது 18 ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்து செய்த பாவத்தினை கழுவுவதற்காகவே 19 ஆவது திருத்தத்தினை ஆதரித்ததாகவும், தற்போது 20 ஆவது திருத்தம் மீண்டும் வந்திருக்கின்ற நிலையில் அதனை பாராளுமன்றில் நிறைவேற்றி ஜனநாயகத்திற்கு பாதகத்தினை ஏற்படுத்தும் நிலைமைகள் இருப்பதால் உயர் நீதிமன்றம் தலையீடு செய்து அதனை தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
அத்தகைய நிலையில் அவர் 20 இற்கு எதிராக தனது கட்சியின் முழுமையான பலத்தினை பயன்படுத்துவதற்கு தவறிவிட்டார். அதேபோன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைமையும் முழுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்த தவிறிவிட்டது.
முஸ்லிம் கட்சிகளின் இந்த மாறுபட்ட செயற்பாடானது அவர்களின் அர்த்தமற்ற அரசியல் நிலைப்பாடுகளை வெளிப்படுத்தவதாகவே இருக்கின்றது. குறிப்பாக அக்கட்சிகளின் தலைமைகள் இந்த விடயத்தில் மக்களை முட்டாள்களாக கருதாது உரிய தெளிவுபடுத்தல்களை உடன் செய்ய வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment