இலங்கை மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளது, வெளிநாட்டு முதலீடுகளுக்கு திறந்த நாடு : ஜனாதிபதி கோத்தபய - News View

About Us

About Us

Breaking

Thursday, October 1, 2020

இலங்கை மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளது, வெளிநாட்டு முதலீடுகளுக்கு திறந்த நாடு : ஜனாதிபதி கோத்தபய

(இராஜதுரை ஹஷான்) 

சீன நிதி உதவியில் ஹம்பாந்தோட்டை துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டதை கடன் வலையில் சிக்கிக் கொள்வதாக சில தரப்பினர் குறிப்பிட்டபோதும் ஹம்பாந்தோட்டை துறைமுகம் பாரிய அபிவிருத்தி ஆற்றல் வளம் கொண்ட திட்டமாகும். கடந்த அரசாங்கம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கியபோதும் அது பயன்படுத்தப்படுவது வர்த்தக நோக்கத்திற்காக மாத்திரமே ஆகும் என ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தெரிவித்தார். 

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கொரிய மக்கள் குடியரசின் தூதுவர் ஜோங் வூன்ஜின்ங், ஜேர்மனி சமஷ்டி மக்கள் குடியரசின் தூதுவர் ஹொல்கர் லோத்தர் செய்பெட், புனித வத்திக்கான் அப்போஸ்தலிக் நன்சியோ தூதுவர் பேரருட் மொன்சிங்ஜோர் பிரயன் உடைக்வே ஆண்டகை, சுவிஷ்லாந்து தூதுவர் டொமினிக் பேர்க்லர் ஆகியோர் நேற்று ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதியை சந்தித்தவேளை ஜனாதிபதி தூதுவர்களிடம் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டதாவது, இலங்கை நாடு ஒரு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளது. எமது நாடு பல தரப்பினரையும் ஈர்த்துள்ளது. இவ்வாறான நிலையில் இலங்கை நடுநிலையான வெளிநாட்டுக் கொள்கையை தெரிவு செய்துள்ளது. பரஸ்பர தன்மையுடன் கூடிய அபிவிருத்தி, ஒத்துழைப்பு எமது முதலாவது முன்னுரிமையாகும். 

ஆகவே வெளிநாட்டு முதலீடுகளுக்கு இலங்கை திறந்த நாடு. இந்து சமுத்திரம் அனைத்து நாடுகளுக்கும் திறந்த சுதந்திர வலயமாக காணப்பட வேண்டும். இந்து சமுத்திரத்தை அமைதி வலயமாக மாற்ற வேண்டும் எனவும் இலங்கை சுமார் ஐந்து தசாப்தங்களுக்கு முன்னர் முன்மொழிந்ததையும் நினைவுப்படுத்த வேண்டியது அவசியாகும். 

2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் துரித அபிவிருத்தியை அடைவது அரசாங்கத்தினதும் நாட்டு மக்களினதும் பிரதான எதிர்பார்ப்பாக காணப்பட்டது. பயங்கரவாதத்தின் காரணமாக பொருளாதாரம் பெரிதும் வீழ்ச்சியுற்றிருந்தது. துரிதகர பொருளாதார அபிவிருத்திக்கு பிற நாடுகளின் உதவிகள் தேவைப்பட்டன. 

அபிவிருத்தி திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க சீனா முன்வந்தது. இரு நாடுகளுக்குமிடையில் வர்த்தக ரீதியான கொடுக்கல் வாங்கல் இடம்பெற்றன. எனினும் இதனை ஒரு தரப்பினர் சீனாவிற்கு சார்பாக வியாக்கியானம் செய்தார்கள். 

இலங்கை அனைத்து நாடுகளுடனும் நற்புறவுடனே உள்ளது. சீன நிதியுதவியில் அம்பாந்தோட்டை துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டதை கடன் வலையில் சிக்கிக் கொண்டதாக சில தரப்பினர் குறிப்பிட்டபோதும் அம்பாந்தோட்டை துறைமுகம் பாரிய அபிவிருத்தி ஆற்றல் கொண்ட செயற்திட்டமாகும். 

கடந்த அரசாங்கம் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நாட்டு நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கிய போதும் அது வர்த்தக நோக்கத்திற்காக மாத்திரம் பயன்படும் என ஜனாதிபதி துர்துவர்களுடன் சுமுகமான முறையில் உரையாடினார். 

கொவிட்-19 வைரஸ் பரவலை வெற்றிகரமான முறையில் கட்டுப்படுத்திய ஜனாதிபதிக்கும், இலங்கை மக்களுக்கும் நான்கு தூதுவர்களும் பாராட்டினை தெரிவித்தார்கள்.

இலங்கை மிகவும் பாதுகாப்பான நாடு என கொரிய நாட்டின் தூதுவர் 'ஜனாதிபதியிடம் குறிப்பிட்டார். நாம் இலங்கைக்கு வருகை தந்திருப்பது. உங்களுக்கு விரிவுரை நிகழ்த்துவதற்கு அல்ல எம்மால் முடிந்த உதவிகளை செய்வதற்கே ஆகும். செய்ய வேண்டியதை இலங்கை சிறப்பாக தெரிவு செய்யும் என்பது எமது நம்பிக்கையாகும். 

இலங்கையின் அபிவிருத்தி எதிர்பார்ப்புக்களை அடைவதற்கு முடியுமான உதவிகளை செய்ய தயாராக உள்ளோம் என ஜேர்மன் மற்றும் சுவிற்சர்லாந்து துர்துவர்கள் இதன் போது தெரிவித்தனர். 

2015 ஆம் ஆண்டு பரிசுத்த பாப்பரசர் இலங்கைக்கு விஜயம் செய்த போது தானும் வந்திருந்ததாக குறிப்பிட்ட பேரருட் திரு பிரயன் உடைக்கே ஆண்டகை ஜனாதிபதிக்கு கிடைத்துள்ள பாரிய மக்கள் ஆணைக்கு பாப்பரசரின் வாழ்த்தினை தெரிவித்தார். பூகோள அமைவிடம் இலங்கை பெற்றிருக்கும் பெறுபேறு என ஆண்டுனை மேலும் வாழ்த்தினார்.

No comments:

Post a Comment