70 நிமிடங்களில் கொரோனா தொற்றாளரை இனங்கண்டுகொள்ள முடியும்! நவீன முறையை முன்னெடுக்கும்படி ராஜித ஆலோசணை - News View

Breaking

Post Top Ad

Wednesday, October 14, 2020

70 நிமிடங்களில் கொரோனா தொற்றாளரை இனங்கண்டுகொள்ள முடியும்! நவீன முறையை முன்னெடுக்கும்படி ராஜித ஆலோசணை

(எம்.எம்.சில்வெஸ்டர்) 

கொவிட்-19 தொற்றாளர்களை விரைவில் அறிந்து கொள்ளக் கூடிய ஆர்.எம்.பீ. (R.M.B - Robotic Magnetic system) எனப்படும் நவீன மருத்துவ பரிசோதனையின் மூலமாக பீ.சி.ஆர். பரிசோதனையை மேற்கொண்டால் வெறும் 70 நிமிடங்களில் தொற்றாளரை இனங்கண்டுகொள்ள முடிவதுடன், நாட்டில் கொவிட்-19 கட்டுப்படுத்திக் கொள்ள முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ண தெரிவித்துள்ளார். 

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் இன்று நடைபெற்ற ஊடகயவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார். 

இதன்போது அவர் மேலும் கூறுகையில், "தற்போது நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வருவதை கொவிட்-19 இன் இரண்டாம் அலை என எவர் கூறினாலும், நான் அதனை ஏற்க மாட்டேன். ஏனெனில், கொவிட்ட-19 இன் தாக்கம் இன்னும் 2 வருடங்களுக்கு இருக்கும் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்தது. 

இவ்வாறான ஓர் சந்தர்ப்பத்திலேயே அரசாங்கம் பொதுத் தேர்தலை நடத்தியிருந்தது. கொரோனா தொற்று அச்சம் இல்லை என்று கூறிக் கொண்டு பொதுத் தேர்தலை நடத்தியதுடன், தற்போது தேர்தலில் வெற்றி பெற்றவுடன் கொவிட்-19 குறித்து அரசாங்கம் மறந்தும் போயுள்ளனர். இதன் காரணமாகவே இந்த கொவிட்-19 தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ளது. 

நாட்டில் உள்ள சகலருக்கும் கூடிய விரைவாக பீ.சி.ஆர். பரிசோதனையை மேற்கொள்வதன் ஊடாக கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை இனங்கண்டு கொள்ள முடியும். இதற்காக அரசாங்கம் வினைத்திறனாக செயற்பட வேண்டும். 

நாட்டு மக்களின் உயிர்களுக்கு பாதுகாப்பு மற்றும் உத்தரவாதம் அளிப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். ஆகவே, உலக நாடுகளில் கொவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு நடைமுறைப்படுத்தும் நவீன மருத்துவ முறைமைகளை கையாள்வது அவசியமாகும். 

நான் அறிந்த வகையில், தற்போது நாம் பயன்படுத்தப்படும் பீ.சி.ஆர். பரிசோதனை முறைமை விடவும் ஆர்.எம்.பீ. (R.M.B - Robotic Magnetic system) மருத்துவ பரிசோதனை முறைமையை கையாள்வது சிறப்பாகும். 

இந்த மருத்துவ வசதிகள் தற்போது கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு கிடைக்கப் பெற்றுள்ளதுடன், அவற்றை விமானம் மூலம் இலங்கைக்கு வரும் பயணிகளிடம் செயற்படுத்திக் கொள்ளுமாறு அரசாங்கத்தை வேண்டுவதுடன், முடியுமானால் இந்த நவீன மருத்துவ பரிசோதனையை நாட்டில் உள்ளவர்களுக்கும் செயற்படுத்துங்கள். 

ஏனெனில் சாதாரணமாக நாம் செய்யும் பி.சீ.ஆர். பரிசோதனைக்கு 3030 ரூபாவுடன் இதர மருத்துவ சிகிக்சைகளுக்கென மொத்தமாக 4300 ரூபா செலவாகிறது. புதிய மருத்துவ முறைமையில் 4900 ரூபா செலவாகிறது. 

எனினும், பழைய முறையில் பி.சீ.ஆர். பரிசோதனைக்கு 6 மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் தேவைப்படுகின்றபோதிலும், புதிய முறையில் வெறும் 70 நிமிடங்களில் கொரோனா நோய் தொற்றுக்குள்ளான வரை இனங்காண முடியும். ஆகவே, வினைத்திறனான மருத்துவ சேவையை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பாரிய பொறுப்பாகும்" என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad