நீதிமன்ற தீர்ப்பொன்றை பாதுகாக்க முடியாத அரசாங்கத்திடமிருந்து எவ்வாறு நாட்டின் பாதுகாப்பை எதிர்பார்ப்பது : ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி - News View

About Us

About Us

Breaking

Sunday, October 11, 2020

நீதிமன்ற தீர்ப்பொன்றை பாதுகாக்க முடியாத அரசாங்கத்திடமிருந்து எவ்வாறு நாட்டின் பாதுகாப்பை எதிர்பார்ப்பது : ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி

(செ.தேன்மொழி) 

அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்த சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுக்கள் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசீலனைகளின் தீர்ப்பு ஜனாதிபதி மற்றும் சபாநாயகருக்கு மாத்திரமே அனுப்பப்பட்டுள்ள நிலையில், அது எவ்வாறு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளரும், சட்டத்தரணியுமான ஹெரந்த கேள்வி எழுப்பினார். 

இவ்வாறான நிலைமையில் நீதிமன்றத்தின் சுயாதீன தன்மை தொடர்பில் கேள்வி எழுவதாகவும் குறிப்பிட்ட அவர், நீதிமன்ற தீர்ப்பொன்றை பாதுகாக்க முடியாத அரசாங்கத்திடமிருந்து எவ்வாறு நாட்டின் பாதுகாப்பை எதிர்பார்ப்பது என்றும் சுட்டிக்காட்டினார். 

அவர் மேலும் கூறியதாவது, அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்த சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுக்கள் தொடர்பான பசீலனைகளின் தீர்ப்புகள் ஜனாதிபதி மற்றும் சபாநாயகருக்கு மாத்திரமே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் உயர் நீதிமன்றத்தின் தீர்பு என்று கூறப்படும் பிரதி ஒன்று தற்போது சமூக வளைத்தளங்கள் ஊடாக பகிரப்பட்டு வருகின்றது. நீதிமன்ற தீர்பொன்றை யார் இவ்வாறு வெளியிட்டது. 

இதேவேளை சமூக வளைத்தளத்தில் பகிரப்பட்டு வரும் நீதிமன்ற தீர்ப்பும், உயர் நீதிமன்றத்தினால் ஜனாதிபதி மற்றும் சபாநாயகருக்கு அனுப்பப்பட்டுள்ள தீர்ப்பும் சமமானதாக இருந்தால் அது பாரிய சிக்கலை ஏற்படுத்தும். 

இவ்வாறான நிலையில் உயர் நீதிமன்றத்தின் தீர்பொன்று எவ்வாறு வெளியில் வந்தது என்ற கேள்வி எழுவதற்கான வாய்ப்புள்ளது. இதன்போது நீதிமன்றத்தின் சுயாதீன தன்மை தொடர்பிலும் சந்தேகம் எழுகின்றது. 

அரசாங்கம் ஆரம்பத்திலிருந்தே பொறுப்பற்றே செயற்பட்டு வருகின்றது. அதற்கமைய முறையற்ற நிதி முகாமைத்துவம் காரணமாக வரி குறைப்பை செய்து, நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. 

பின்னர் கொரோனா வைரஸ் பரவலின் நெருக்கடி நிலைமையை மறந்து செயற்பட்டதன் காரணமாக தற்போது நாடு பூராகவும் வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். 

மேலும் தற்போது ஜனாதிபதியின் பேச்சுக்கு கட்டுப்பட்டு செயற்படுபவர்களுக்கு மாத்திரமே தங்களது பதவிகளில் இருப்பதற்கான சந்தரப்பம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு எதிராக செயற்படுபவர்கள் உடனே அந்த பதவிகளிலிருந்து விலக்கப்படுகின்றனர். இதுதான் தற்போதைய அரசாங்கத்தின் நிலைமை என்றார்.

No comments:

Post a Comment