கொரோனா பரவுவதை தடுக்க மக்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் - 56 யோசனைகளைக் கொண்ட வழிகாட்டுதலில் அனைத்து துறைகளும் செயற்பட வேண்டும் : சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி - News View

About Us

About Us

Breaking

Sunday, October 4, 2020

கொரோனா பரவுவதை தடுக்க மக்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் - 56 யோசனைகளைக் கொண்ட வழிகாட்டுதலில் அனைத்து துறைகளும் செயற்பட வேண்டும் : சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி



நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு மக்கள் வழங்கிய உச்சளவு ஒத்துழைப்பை மீண்டும் வழங்க வேண்டும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கோரியுள்ளார். 

மற்றுமொரு கொரோனா வைரஸ் தொற்று நோயாளி சமூகத்திலிருந்து இனங்காணப்பட்டுள்ள நிலையில் நாட்டிலிருந்து வைரஸ் தொற்று நிலைமையை முற்றாகக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றும் அதற்காக அனைவரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

திவுலபிடிய பகுதியில் சமூகத்திலிருந்து மற்றுமொரு வைரஸ் தொற்று பெண் இனங்காணப்பட்டுள்ளதையடுத்து நேற்றைய தினம் ராஜகிரியிலுள்ள கொரோனா வைரஸ் தடுப்பு தேசிய கட்டுப்பாட்டு நிலையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் விளக்கம் அளிக்கும்போதே அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது, நீண்ட காலங்களுக்குப் பின் சமூகத்திலிருந்து வைரஸ் தொற்று நோயாளியொருவர் பதிவாகியுள்ளார். நாட்டு மக்கள் கடந்த காலங்களில் வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு வழங்கிய ஒத்துழைப்பை மீண்டும் வழங்க வேண்டும். 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையிலான அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள், மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு மூலமே கடந்த காலங்களில் வைரஸ் தொற்றை முற்றாகக் கட்டுப்படுத்த முடிந்தது.

அதற்கிணங்க சுகாதாரத் துறையினரின் ஆலோசனைகளைப் பின்பற்றி முகக் கவசம் அணிதல், ஒரு மீட்டர் இடைவெளி, கைகளைக் கழுவுதல் உள்ளிட்ட செயற்பாடுகளைத் தவறாது மேற்கொள்ள வேண்டும்.

ஒரேயொரு வைரஸ் தொற்று நோயாளியே இனங்காணப்பட்டுள்ள நிலையில் அதிலிருந்து நாட்டை பாதுகாத்துக் கொள்வதற்கு நாட்டு மக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

உலகில் ஏனைய நாடுகளை விட எமது நாட்டு மக்கள் சுகாதார வழிமுறைகளை முறையாகப் பின்பற்றுபவர்கள். நாட்டை வைரஸ் தொற்றிலிருந்து நீக்குவதற்கு எமக்கு அது பெரும் உறுதுணையாக அமைந்தது. சர்வதேச ரீதியில் பத்து இலட்சம் பேர் வரை உயிரிழந்துள்ள நிலையில் இதற்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.

கொரோனா வைரஸ் தொற்று சுவாசத்தினூடாகவும் தொற்றக்கூடிய நோயாகும். அதற்கிணங்க மக்கள் சனப் பெருக்கம் அதிகமான இடத்தில் நிற்பதைத் தவிர்த்துக் கொள்வது அவசியம்.

இசைக் கச்சேரிகள் உள்ளிட்ட வேறு களியாட்டங்கள் ஆகியவற்றை மேலும் சில காலத்துக்கு கட்டுப்படுத்த வேண்டியுள்ளது. சுகாதார அமைச்சினால் இத்தகைய சூழ்நிலையில் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் 56 யோசனைகளைக் கொண்ட வழிகாட்டுதல் சகல பிரவுகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க அனைத்து துறைகளும் செயற்பட வேண்டியது அவசியம். 

சுகாதார வழிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு சுகாதாரத் துறையினர் கடுமையான விசாரணைகளை முன்னெடுப்பர்.

மக்கள் காய்ச்சல் ஏற்படுமானால் அருகிலுள்ள பெரியாஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுமதிப்பது முக்கியம். நேற்று இனங்காணப்பட்ட வைரஸ் தொற்று நோயாளியும், அவ்வாறு பரிசோதனைகள் மூலமே இனங்காணப்பட்டுள்ளார். அனைத்து ஆஸ்பத்திரிகளுக்கும் அதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

தினமும் 10 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு நோய் தொடர்பாக ஆராயப்படுகிறது. அதற்கிணங்கவே நேற்றும் சமூகத்தில் ஒரு நோயாளி இனங்காணப்பட்டுள்ளார். மூன்று இடங்களில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே நோயாளி உறுதி செய்யப்பட்டுள்ளார்.

நாட்டில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு தேவையான செயற்பாடுகளை கடுமையாக முன்னெடுக்கவும் எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment