நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நுளம்புப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த விசேட செயற்திட்டம் - அதீத அவதானத்திற்குரிய 53 பகுதிகளும் அவதானத்திற்குரிய 147 பகுதிகளும் அடையாளம் - News View

Breaking

Post Top Ad

Thursday, October 15, 2020

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நுளம்புப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த விசேட செயற்திட்டம் - அதீத அவதானத்திற்குரிய 53 பகுதிகளும் அவதானத்திற்குரிய 147 பகுதிகளும் அடையாளம்

(நா.தனுஜா) 

தேசிய ரீதியில் நுளம்புப் பெருக்கத்தை தடுப்பதற்கான வாரத்தை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நுளம்புப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான விசேட செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்திருக்கிறது. 

நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளிலும் அதிகரித்திருக்கும் மழை வீழ்ச்சியின் காரணமாக நுளம்புகளின் பெருக்கத்திலும் அதிகரிப்பொன்று அவதானிக்கப்பட்டுள்ளது. பல பிரதேசங்களில் நுளம்பு பெருக்கத்திற்கு ஏதுவான சூழல் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. 

இவ்வாறு நாடளாவிய ரீதியில் அதீத அவதானத்திற்குரிய 53 பகுதிகளும் அவதானத்திற்குரிய 147 பகுதிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன. 

இம்மாதம் 14 - 20 வரையான காலப்பகுதி தேசிய ரீதியில் நுளம்புப் பெருக்கத்தைத் தடுப்பதற்கான வாரமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மேற்படி பகுதிகளில் நுளம்புப் பெருக்கத்தைத் தடுப்பதற்கான விசேட செயற்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. 

எனினும் கொவிட்-19 கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் இச்செயற்திட்டம் முன்னெடுக்கப்பட மாட்டாது. 

இலங்கையில் 1980 ஆம் ஆண்டிலிருந்து பல்வேறு காலப் பகுதியிலும் டெங்கு நோய் ஒரு சுகாதார அச்சுறுத்தலாக மாறிவருவது அவதானிக்கப்பட்டிருக்கிறது. 

கடந்த வருட தரவுகளுடன் ஒப்பிடுகையில், இவ்வருடத்தில் அதே காலப்பகுதியில் அடையாளம் காணப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 50 சதவீதத்தினால் குறைந்திருக்கிறது. 

அதேவேளை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உள்ளடங்கலாக மேலும் சில மாவட்டங்களில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். 

மேலும் கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பகுதிகளில் விரைவில் டெங்கு நுளம்புகள் பெருகக் கூடிய சாத்தியம் உயர்வாக இருப்பதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்திருக்கிறது. 

அதேபோன்று கைத்தொழிற்சாலைகளில் 42.15 சதவீதமும் பாடசாலைகளில் 40.12 சதவீதமும் பொது இடங்களில் 40.96 சதவீதமும் வணக்கஸ்தலங்களில் 37.86 சதவீதமும் நுளம்பு பெருகுவதற்கான சாத்தியம் காணப்படுகிறது. 

இந்நிலையில் நுளம்புப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான செயற்திட்டமானது கொவிட்-19 பரவலைத் தடுப்பதற்கான சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக சுகாதாரப் பிரிவினர், பொலிஸார் உள்ளிட்ட தரப்பினரால் முன்னெடுக்கப்படும். 

அதன்படி அவர்கள் சுற்றாடலை பரிசோதிப்பதற்காக வருகை தருவார்கள் என்றும் அவர்களுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் கேட்டுக் கொண்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad