20 ஆவது திருத்தம் பாராளுமன்றில் விவாதிக்கப்படும் போது எதிர்த்தரப்பின் பலர் ஆதரவு வழங்குவார்கள் - ரொஷான் ரணசிங்க - News View

Breaking

Post Top Ad

Thursday, October 15, 2020

20 ஆவது திருத்தம் பாராளுமன்றில் விவாதிக்கப்படும் போது எதிர்த்தரப்பின் பலர் ஆதரவு வழங்குவார்கள் - ரொஷான் ரணசிங்க

(இராஜதுரை ஹஷான்) 

வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்துக்கு எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் பலர் இறுதிக்கட்டத்தில் ஆதரவு வழங்குவார்கள். சட்டமூல வரைபில் உள்ளடக்கப்பட்டுள்ள ஏற்பாடுகள் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு உட்படுத்தப்படும் போது திருத்தத்தை எதிர்த்தரப்பினரும் ஏற்றுக் கொள்வார்கள் என காணி விவகார இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார். 

பொலனறுவையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்தகொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அரசியமைப்பின் 20 ஆவது திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டால் நிறைவேற்று அதிகாரத்துக்கும் பாராளுமன்றத்துக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்படும் என எதிர்த்தரப்பினர் குறிப்பிடுகிறார்கள். கடந்த அரசாங்கத்திலேயே ஜனாதிபதிக்கும், பாராளுமன்றத்துக்கும் இடையில் அதிகார பிரயோகம் தொடர்பான முரண்பாடுகள் தோற்றம் பெற்றன. இந்த முரண்பாடு ஒரு கட்டத்தில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தின. 

2015 ஆம் ஆண்டு இரண்டு வேறுப்பட்ட கொள்கைகளை கொண்ட அரசியல் கட்சிகள் ஒன்றினைந்து தேசிய அரசாங்கத்தை ஸ்தாபித்ததால் பலவீனமான அரசாங்கம் செயற்படுத்தப்பட்டது. ஆனால் நடைமுறையில் அவ்வாறான நிலைமை தோற்றம் பெறாது ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். 

அரசியமைப்பின் 20 ஆவது திருத்தத்தினால் அரச நிர்வாகத்திற்கும், அரசாங்கத்துக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் ஊடாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியிடமிருந்து பறிக்கப்பட்ட அதிகாரங்கள் 20ஆவது திருத்தம் ஊடாக ஜனாதிபதிக்கு மீள வழங்கப்பட்டுள்ளது. 

வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்துக்கு எதிராக எதிர்த்தரப்பினர் தற்போது மாறுப்பட்ட கருத்துக்களை அரசியல் நோக்கம் கருதி குறிப்பிட்டுக் கொள்கிறார்கள். 20 ஆவது திருத்தம் பாராளுமன்றில் விவாதிக்கப்படும் போது எதிர்த்தரப்பின் பலர் ஆளும் தரப்பிற்கு சாதகமாக திருத்தத்துக்கு ஆதரவு வழங்குவார்கள் . என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad