அம்பாறையில் 49 வர்த்தகர்களுக்கு எதிராக 2 இலட்சத்து 2 ஆயிரம் ரூபாய் அபராதம் - News View

About Us

About Us

Breaking

Monday, October 19, 2020

அம்பாறையில் 49 வர்த்தகர்களுக்கு எதிராக 2 இலட்சத்து 2 ஆயிரம் ரூபாய் அபராதம்

அம்பாறை மாவட்டத்தில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை மீறி வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்ட 49 வர்த்தகர்களுக்கு எதிராக நீதிமன்றங்களினால் 2 இலட்சத்து 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக, பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் அம்பாறை மாவட்ட பொறுப்பதிகாரி என்.எம். சப்றாஸ் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ஆலையடிவேம்பு, திருக்கோவில், பொத்துவில், நிந்தவூர், சம்மாந்துறை, கல்முனை, அம்பாறை, தெஹியத்தகண்டி ஆகிய பிரதேசங்களிலுள்ள வர்த்தக நிலையங்களில் பாவனையாளர் அலுவலகல்கள் அதிகார சபையின் புலனாய்வு உத்தியோகத்தர்களால் இம்மாதம் மேற்கொள்ளப்பட்ட 120 சோதனைகளின்போது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை மீறி வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட 49 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

கட்டுப்பாட்டு விலையை மீறி கூடுதல் விலைக்கு அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்த மற்றும் அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அரிசியை விற்பனை செய்த வர்த்தகர்கள் இச்சுற்றிவளைப்பின்போது கண்டுபிடிக்கப்பட்டதாக, அவர் கூறினார்.

மேலும் வர்த்தக நிலையங்களில் விலைப்பட்டியலை காட்சிப்படுத்தாமை, நுகர்வுக்குப் பொருத்தமில்லாத பொருட்களை காட்சிப்படுத்தியமை, காலாவதியான பொருட்கள் மற்றும் தரமற்ற பொருட்களை விற்பனை செய்து நுகர்வோரை ஏமாற்றுதல், மின் உபகரணங்களுக்கான கட்டுறுதிக் காலத்தை வழங்காமை போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட வர்த்தகர்களுக்கு எதிராகவும், நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ததாகவும், அவர் கூறினார்.

அம்பாறை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, கல்முனை, தெஹியத்தகண்டி, ஆகிய நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்ததாகவும், அவர் கூறினார்.

பெரும்போக நெற்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள விலையை விட உரத்தினை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களில் திடீர் சுற்றி வளைப்புகளை மேற்கொள்ளவுள்ளதாகவும், மாவட்டப் பொறுப்பதிகாரி என்.எம். சப்றாஸ் மேலும் தெரிவித்தார்.

(ஒலுவில் விசேட நிருபர் - எம்.எஸ்.எம்.ஹனீபா)

No comments:

Post a Comment