கஞ்சா கடத்திய இராணுவ சிப்பாய் உள்ளிட்ட மூவர் கைது - வங்கிக் கணக்குகளில் 402,000 ரூபா பணம் வைப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, October 11, 2020

கஞ்சா கடத்திய இராணுவ சிப்பாய் உள்ளிட்ட மூவர் கைது - வங்கிக் கணக்குகளில் 402,000 ரூபா பணம் வைப்பு

யாழ் - கிளிநொச்சி பகுதியிலிருந்து வெவ்வேறு பகுதிகளுக்கு கேரள கஞ்சாவை கடத்திய இராணுவ சிப்பாய் உள்ளிட்ட சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

சந்தேக நபர்கள் மின்னேரியா, ஹிங்குரான்கொட மற்றும் அரலங்வில பகுதிகளுக்கு இவ்வாறு கேரள கஞ்சா போதைப் பொருளை கடத்தியுள்ளனர். 

மின்னேரியா குற்றத் தடுப்புப் பிரிவின் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலையடுத்து மின்னேரியா பகுதியில் நேற்று சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பிலேயே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். 

சந்தேக நபர்களிடமிருந்து 590 கிராம் கேரள கஞ்சா, கஞ்சா விற்பனையின் மூலம் பெற்ற பணம் 61,000 ரூபா ஆகியன கைப்பற்றப்பட்டன. 

சந்தேக நபர்களின் வங்கிக் கணக்குகளில் 4 இலட்சத்து இரண்டாயிரம் (402,000) ரூபா பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

மிஹிந்தலை இராணுவ முகாமில் கடமையாற்றும் குருணாகல் - மாவத்தகம பகுதியைச் சேர்ந்த இராணுவ சிப்பாய் ஒருவரும், ஹிங்குரான்கொட - படுகொட்டுவ பகுதியைச் சேர்ந்த நபரொருவர் மற்றும் மின்னேரியா - ஹேன்யாய பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

சந்தேக நபர்கள் மூவரும் நீண்ட காலமாக இரகசியமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment