மாஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் டபிள்யூ.எஸ்.ஓ 2 ஆகிய வர்த்தக நிறுவனங்களின் ஊழியர்களுக்கு கொரோனா - News View

About Us

About Us

Breaking

Monday, October 19, 2020

மாஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் டபிள்யூ.எஸ்.ஓ 2 ஆகிய வர்த்தக நிறுவனங்களின் ஊழியர்களுக்கு கொரோனா

(நா.தனுஜா) 

வர்த்தக நிறுவனங்கள் இரண்டினது ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதுடன், அவர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்களைக் கண்டறியும் செயற்பாட்டில் பொலிஸாருக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருவதாக அந்நிறுவனங்கள் அறிவித்திருக்கின்றன. 

தமது ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை தொடர்பில் வர்த்தக நிறுவனங்களான மாஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் டபிள்யூ.எஸ்.ஓ 2 ஆகியவை அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. 

தமது ஊழியர்கள் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை தொடர்பில் மாஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, 

எமது ஊழியர்கள் மற்றும் பங்குதாரர்களின் சுகாதார நலனுக்கும் பாதுகாப்பிற்குமே நாம் உயர் முன்னுரிமை வழங்குகின்றோம். கொரேனா வைரஸ் தொற்று ஏற்படுவதைத் தடுப்பதற்காக நாம் அனைத்து விதமான சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருந்த போதிலும் கூட, தொற்றுப் பரவல் அச்சம் உயர்வாக உள்ள பகுதிகளில் வசிக்கும் எமது நிறுவன ஊழியர்கள் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. 

இந்நிலையில் அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் அவசியமான உதவிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு நாம் தயாராக இருக்கின்றோம். 

அதேவேளை எமது ஊழியர்கள் மற்றும் பங்குதாரர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அரசாங்கத்துடனும் சுகாதாரப் பிரிவினருடனும் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறோம். 

அதன்படி மினுவாங்கொடை கொத்தணி பரவல் தொடர்பில் முதன் முதலில் தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து கடந்த 4 ஆம் திகதியிலிருந்து பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் இயங்கி வந்த எமது நிறுவனத் தொகுதிகளின் செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட்டன. 

அதேபோன்று தொற்றுப் பரவல் அச்சம் உயர்வாக உள்ள பகுதிகளைச் சேர்ந்த ஊழியர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புகளைப் பேணிய ஊழியர்களை உடனடியாக சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக் கொள்ளுமாறு வலியுறுத்தியதுடன், அவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. 

அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் ஊடாக துரதிஷ்டவசமாக எமது நிறுவனத்தின் ஊழியர்கள் சிலர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருக்கின்றமை இனங்காணப்பட்டதுடன் அவர்கள் தற்போது அரச வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

அதனைத் தொடர்ந்து அந்த ஊழியர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியவர்களைக் கண்டறிவதற்கு பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு எமது பூரண ஒத்துழைப்பை வழங்கினோம். 

மேலும் சுகாதாரப் பிரிவினரின் ஆலோசனைக்கு அமைவாக நாடளாவிய ரீதியில் பல்வேறு பிரதேசங்களிலும் இயங்கும் எமது நிறுவனத்தின் கிளைகளில் பணியாற்றுவோருக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. 

அந்தப் பரிசோதனைகளின் ஊடாக ஏனைய கிளைகளில் பணியாற்றுவோருக்கு வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதிலும், நாம் எமது ஊழியர்களுக்கு உரியவாறான சுகாதார அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கின்றோம். 

அதுமாத்திரமன்றி எமது ஊழியர்கள் இது விடயத்தில் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளக் கூடிய வகையில் 24 மணி நேரம் சேவையில் இருக்கக் கூடிய தொலைபேசி எண்ணொன்றையும் அறிமுகப்படுத்தியிருக்கிறோம் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதேவேளை டபிள்யூ.எஸ்.ஓ 2 நிறுவனமும் தமது ஊழியரொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமையை உறுதிப்படுத்தி அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கிறது. 

அவ்வறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது சுகாதாரப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் ஊடாக எமது நிறுவனத்தின் ஊழியரொருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

அந்த ஊழியரின் குடும்ப உறுப்பினர் ஒருவரினூடாகவே அவருக்கு தொற்று ஏற்பட்டிருக்கிறது. தற்போது அவர்கள் அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக, உரியவாறு சிகிச்சை பெற்றுவருகிறார்கள். 

எமது நிறுவன ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் கடந்த மார்ச் மாதத்திலிருந்து வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறை அமுல்படுத்தப்பட்டு வந்ததுடன் அது பின்னர் ஜுலை வரையில் நீட்டிக்கப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையான ஊழியர்களுடன் கடந்த ஆகஸ்ட் மாதம் நாம் மீண்டும் அலுவலக செயற்பாடுகளை ஆரம்பித்தோம். 

எனினும் தற்போது மீண்டும் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரவலைக் கருத்திற்கொண்டு கடந்த 3 ஆம் திகதியிலிருந்து அலுவலக ரீதியான செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment