மட்டக்களப்பு இரு வைத்தியசாலைகளில் 212 கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்காக அனுமதி - கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் லதாகரன் - News View

About Us

About Us

Breaking

Thursday, October 22, 2020

மட்டக்களப்பு இரு வைத்தியசாலைகளில் 212 கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்காக அனுமதி - கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் லதாகரன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு மற்றும் காத்தான்குடி வைத்தியசாலைகளில் கொரோனா தொற்றாளர்கள் 212 பேர் சிகிச்சை பெற்று வருவதாக, கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர், வைத்தியர் ஏ.லதாகரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்று நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளாக கரடியானாறு மற்றும் காத்தான்குடி வைத்தியசாலைகள் செயற்பட்டு வருகின்றன.

இதற்கமைய, காத்தான்குடி வைத்தியசாலையில் 170 பேரும் கரடியனாறு வைத்தியசாலையில் 42 பேருமாக 212 கொரோனா தொற்றாளர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

'நாட்டில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்துள்ளமை காரணமாக தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான வைத்தியசாலைகள் மேலும் தேவைப்படுகின்றன.

இந்நிலையில், சுகாதார அமைச்சின் பணிப்புரைப்படி கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தில் ஈச்சலம்பற்று வைத்தியசாலை, மட்டக்களப்பில் கரடியனாறு வைத்தியசாலை, அம்பாறையில் பாலமுனை, தமனை ஆகிய நான்கு வைத்தியசாலைகளை கொரோனா தொற்றுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

இதனடிப்படையில், தெரிவு செய்யப்பட்ட வைத்தியசாலைகளில் புனர்நிர்மாண வேலைகள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில், ஏற்கனவே வைரஸ் தொற்று சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ள காத்தான்குடி வைத்தியசாலையில் இதுவரை 170 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனைவிட, கரடியனாறு வைத்தியசாலையில் பேலியகொடை மீன் சந்தையில் அடையாளம் காணப்பட்ட 42 பேர் உட்பட இரு வைத்திய சாலைகளிலும் 212 பேர் நேற்றிரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பேலியகொடை மீன் சந்தைப் பகுதிக்குச் சென்ற கல்முனை மட்டக்களப்பு பகுதிகளைச் சேர்ந்த மீன் வியாபாரிகளை அடையாளம் கண்டு அவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், பேலியகொடை மீன் சந்தைப் பகுதிக்குச் சென்றவர்கள் யாராவது இருப்பின் அவர்கள் தொடர்பாக பொது சுகாதாரப் பிரிவு மற்றும் பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்' என மேலும் தெரிவித்துள்ளார்.

(காத்தான்குடி நிருபர் - எம்.எஸ்.எம். நூர்தீன்)

No comments:

Post a Comment