20 ஆவது திருத்த சட்டமூலத்தையும் விட கொரோனா அச்சுறுத்தலிலிருந்து மீள்வதே தற்போது முக்கியமானது : ராஜித்த சேனாரத்ன - News View

About Us

About Us

Breaking

Thursday, October 8, 2020

20 ஆவது திருத்த சட்டமூலத்தையும் விட கொரோனா அச்சுறுத்தலிலிருந்து மீள்வதே தற்போது முக்கியமானது : ராஜித்த சேனாரத்ன

(செ.தேன்மொழி) 

அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்த சட்டமூலத்தையும் விட கொரோனா வைரஸ் அச்சுறுத்தலிலிருந்து மீள்வதே தற்போது முக்கியமானது என தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன, இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நாட்டை பாதுகாப்பது தொடர்பிலேயே தற்போது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். 

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, உலக சுகாதார ஸ்தாபனம் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் வருவதற்கு குறைந்தது இரண்டை வருடங்களாகும் என்று அறிவித்துள்ள போதிலும், அரசாங்கம் தாங்கள் கொரோனா வைரஸை வெற்றி கொண்டதில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளதாக கூறி பெருமைப்பட்டுக் கொண்டிருந்தது. 

இதுபோன்ற அரசாங்கத்தின் செயற்பாடுகளின் காரணமாக மக்கள் மத்தியில் வைரஸ் பரவல் தொடர்பான அச்சமும் குறைவடைய ஆரம்பித்தது. இந்நிலையில் வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக பின்பற்றப்பட்டு வந்த சுகாதார விதிமுறைகளையும் மக்கள் தற்போது கைவிட்டுள்ளனர். 

இந்நிலையில் வைரஸ் பரவலின் இரண்டாம் கட்ட அலை தற்போது ஆரம்பித்துள்ளது. விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் தற்போது கொரோனா வைரஸ் எவ்வாறு பரவியது என்பது தொடர்பில் பரிசீலனைகள் இடம்பெற்று வருகின்றன. 

இந்நிலையில் ஏற்கனவே கொரோனா வைரஸ் கிருமிகள் நாட்டுக்குள் இருந்ததா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. அதற்கமைய வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். 

அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்த சட்டமூலத்திற்கு எதிராக நாங்கள் பல ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்திருந்தபோதிலும், வைரஸ் பரவலின் காரணமாக நிறுத்தி வைத்துள்ளோம். 

இதேவேளை 20 ஆவது திருத்த சட்டமூலத்தையும் விட கொரோனா வைரஸ் மிகவும் அச்சுறுத்தலானது. அதனால் அதனை கட்டுப்படுத்துவது தொடர்பிலே அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment