கொரோனாவிற்குள் 20 ஆவது திருத்தத்தை இரகசியமாக நிறைவேற்ற அரசாங்கம் முயற்சி - ஹர்சன ராஜகருணா - News View

About Us

About Us

Breaking

Thursday, October 8, 2020

கொரோனாவிற்குள் 20 ஆவது திருத்தத்தை இரகசியமாக நிறைவேற்ற அரசாங்கம் முயற்சி - ஹர்சன ராஜகருணா

(செ.தேன்மொழி) 

முழு நாடும் கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் அச்சமடைந்துள்ள நிலையில், அரசாங்கம் இரகசியமாக 20 ஆவது திருத்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்ள முயற்சித்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருணா தெரிவித்தார். 

தற்போதைய சூழ்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை வெற்றி கொள்வது தொடர்பிலே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கான நிலைமையில் நாடுயில்லை என்பதை அரசாங்கம் விளங்கிக் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, அரசாங்கம் தாங்கள் கொரோனா வைரஸ் பரவலை வெற்றி கொண்டதாக கூறி பெருமைப்பட்டுக் கொண்டிருந்தனர். ஆனால், தற்போது வைரஸ் பரவலின் இரண்டாம் அலை ஆரம்பித்துள்ளது. 

இந்நிலையில் கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளிலே தற்போது அதிகமான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதனால் கம்பஹா மாவட்டம் முழுவதிலும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட வேண்டும். நாட்டின் பொருளாதார நிலைமையை கருத்திற் கொள்ளாமல், அரசியல் இலாபத்தை கருத்திற்கொண்டு நாங்கள் இவ்வாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் தெரிவிக்க வில்லை. வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது என்றால் தற்போதைய நிலைமைக்கு ஊரடங்கை அமுல்படுத்துவதே மிகப் பொருத்தமாகும். 

இதேவேளை கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் முழு நாடும் அச்சமடைந்துள்ள நிலைமையில், அரசாங்கம் இரகசியமாக அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றிக் கொள்ள முயற்சிப்பதாகவும் தெரியந்துள்ளது. இந்த முயற்சியை அரசாங்கம் உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும். 

20 ஆவது திருத்த சட்டமூலத்தில் காணப்படும் சிக்கலான ஏற்பாடுகள் தொடர்பில் எதிர்ப்பொலிகள் எழுந்துள்ள நிலையில், அதனை கருத்திற் கொள்ளாது அரசாங்கம் செயற்படுவது முறையற்ற செயற்பாடாகும். 

தற்போதைய சூழ்நிலையில் வைரஸ் பரவலிலிருந்து நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாப்பது தொடர்பிலே அரசாங்கத்தின் கவனம் இருக்க வேண்டுமே தவிர, 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்ட மூலம் தொடர்பில் கவனம் செலுத்தக் கூடாது. 

அது மட்டுமன்றி ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்வதில் சிரமப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு அவசியமான பொருட்களை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால் வைரஸ் பரவலின் காரணமாக இல்லாவிட்டாலும், மக்கள் போதிய உணவின்றி உயிரிழக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என்றார்.

No comments:

Post a Comment