(நா.தனுஜா)
அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தத்தின் ஊடாக உருவாக்கப்பட்டிருக்கும் மட்டுமீறிய, உயர் அதிகாரங்களைக் கொண்ட ஜனாதிபதி பதவி தனிப்பட்ட நலன்களுக்காக பயன்படுத்தப்படாது என்று நம்புவதாக குறிப்பிட்டிருக்கும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, ஜனநாயகம் மற்றும் ஒழுக்கத்தின் கோட்பாடுகள் மேலோங்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பில் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கிறார். அதில் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார் அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தத்திற்கு அனுமதியளித்து இவ்வாரம் சபாநாயகர் கையெழுத்திட்டதும், உலகிலேயே தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட உயர் அதிகாரங்களைக் கொண்ட ஜனாதிபதியொருவரை இலங்கை கொண்டிருக்கும்.
இவ்வாறான மட்டற்ற உயர் அதிகாரங்கள் தனிப்பட்ட நலன்களுக்காகப் பயன்படுத்தப்படாது என்று நம்புகின்றோம். அத்தோடு ஜனநாயகம் மற்றும் ஒழுக்கத்தின் கோட்பாடுகள் மேலோங்கும் என்றும் எதிர்பார்க்கிறோம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
அத்தோடு கொரோனா வைரஸ் பரவல் தொடர்பிலும் அவர் பதிவொன்றை செய்திருக்கிறார். அதில் கூறியிருப்பதாவது கொவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று வறுமையையும் பசியையும் தோற்றுவித்திருக்கிறது. பெற்றோர் வருமானத்தை இழக்கும் போது பிள்ளைகள் பாதிக்கப்படுகிறார்கள்.
இந்தத் தொற்று நோயின் விளைவாக மந்த போசணை நிலை அதிகரிக்க கூடிய வாய்ப்புள்ளது. எனவே இதற்கு விரைவான மாற்று வழியைக் கண்டறிய வேண்டியது அவசியமாகும் என்று சுட்டிக் காட்டியிருக்கிறார்.
No comments:
Post a Comment