உங்கள் கண்களை உங்கள் விரல்களினாலேயே குத்திக் கொள்ளாதீர்கள், தமிழ் மக்களின் போராட்டங்களை இரும்புக் கரம் கொண்டு நசுக்கும் திட்டம் 20 இன் பின்னால் இருக்கிறது - விக்னேஸ்வரன் - News View

About Us

About Us

Breaking

Thursday, October 22, 2020

உங்கள் கண்களை உங்கள் விரல்களினாலேயே குத்திக் கொள்ளாதீர்கள், தமிழ் மக்களின் போராட்டங்களை இரும்புக் கரம் கொண்டு நசுக்கும் திட்டம் 20 இன் பின்னால் இருக்கிறது - விக்னேஸ்வரன்

(ஆர்.யசி.எம்.ஆர்.எம்.வஸீம்)

தமிழ் மக்களின் போராட்டங்களை இரும்புக் கரம் கொண்டு நசுக்கும் திட்டம் 20 இன் பின்னால் இருக்கிறது. எமக்கு இடையேயான கட்சி வேறுபாடுகளை மறந்து 20ஆவது திருத்தம் நிறைவேற்றப்படுவதை தடுக்க வேண்டும் என தமிழ் மக்கள் தேசிய கட்சியின் தலைவரும், வட மாகாண முன்னாள் முதலமைச்சரும், நீதியரசருமான விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், சிறுபான்மையினரை பயங்கரவாதிகள் என்று சிந்திப்பது பெரும்பான்மையினரிடம் இருந்து வாக்குகளைப் பெற்றுக் கொடுக்கும். ஆனால் நாட்டை முன்னேற்றவிடாது. ஆகவே இந்த 20ஆவது திருத்தச்சட்டம் மூலமாக அதிகாரத்தை தனி மனிதர் ஒருவரிடம் குவிக்கும் எண்ணத்துடன்தான் கொண்டு வரப்பட்டுள்ளது. இது ஜனநாயகத்திற்கும் மனித உரிமைக்கும் சாவு மணி அடிக்கப் போகின்றது.

ஜனநாயகத்தில் இருந்து சர்வாதிகாரத்தை நோக்கி ஆட்சி பண்புகளின் பரிணாமம் திசை மாறுவதற்கான காரணம் வெறுமனே பதவி மோகம் என்று மட்டும் நான் பார்க்கவில்லை. எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சில அரசியல் நிகழ்வுகளுக்கான முன்னேற்பாட்டு நடவடிக்கையாக நான் இதனை பார்க்கின்றேன். 

தமிழ் மக்கள் தம் மீதான அடக்கு முறைகளுக்கு எதிராகவும் உரிமைகளை வென்றெடுப்பதற்கு மேற்கொண்டு வரும் ஜனநாயக ரீதியாக போராட்டங்களை மேற்கொள்வதற்கு காணப்படும் ஒரு சில ஜனநாயக இடைவெளிகளையும் அடைத்து இரும்புக் கரம் கொண்டு எமது போராட்டத்தை நசுக்குவதற்கான ஒரு நிகழ்ச்சி திட்டமும் இதன் பின்னால் இருப்பதாக நான் கருதுகின்றேன்.

இந்த அரசாங்கம் கடந்த உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் ஏதோ நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டதனால் ஏற்பட்ட சம்பவமாக உருவகித்து ஜனாதிபதியின் அதிகாரத்தை மேலும் கூட்ட முனைகின்றது.

நீதித்துறை, காவல்த்துறை மற்றும் பொது அலுவலர் சேவையை ஒரே நிறைவேற்று ஜனாதிபதியின் மேற்பார்வையின் கீழ் கொண்டுவருவது பாரிய எதிர்விளைவுகளை எதிர்காலத்தில் உண்டாக்கும்.

இந்த அரசு இன்னும் 6 மாத காலத்தில் புதிய அரசியல் அமைப்பை கொண்டுவர உள்ளதாக தெரிவிக்கும் போது இத்தகைய ஒரு சட்ட திருத்தத்தை அவசரகதியில் கொண்டுவர முனைவதானது அவர்களுக்கு பின்னால் இருக்கும் இரகசிய நிகழ்ச்சி நிரல் ஒன்று இருப்பதையே தெட்டத் தெளிவாக காட்டுகின்றது.

எனவே யார் யார் எல்லாம் இந்த 20 ஆவது சட்ட திருத்தத்தை கொண்டு வருவதற்கு இன்று பாடுபடுகிறார்களோ, யார் யார் எல்லாம் இதற்கு ஆதரவு அளிக்கிறார்களோ அவர்கள் எல்லோரும் எதிர்காலத்தில் இதே சட்ட திருத்தத்தை நீக்க வேண்டும் என்று வீதிகளில் இறங்கி போராடும் நிலை நிச்சயம் ஏற்படும் என்பதை நான் பொறுப்புடன் கூறிக் கொள்கிறேன்.

இன்று நீங்கள் கொண்டுவரும் இந்த சட்ட திருத்தும், உங்கள் மீதும், உங்கள் பிள்ளைகள் மற்றும் எதிர்கால உங்கள் சந்ததியினர் மீதும் ஒரு பூமராங் போல மாறும். உங்கள் கண்களை உங்கள் விரல்களினாலேயே குத்தாதீர்கள்.

இந்த 20 ஆவது சட்ட திருத்தத்தை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட அனுமதிக்காதீர்கள். மனித உரிமைகள், ஜனநாயகம், நல்லாட்சி மற்றும் சமாதானம் ஆகியவற்றை நேசிக்கும் அனைவரும் எமக்கு இடையேயான கட்சி வேறுபாடுகளை மறந்து இந்த சட்ட திருத்தம் நிறைவேற்றப்படுவதை தடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment