20 வது திருத்தத்திற்கு எதிரான மதத் தலைவர்களின் நிலைப்பாடுகளுக்கு செவிசாய்க்கும் நேர்மை அரசாங்கத்திற்கு இருக்குமென்று நம்புகின்றேன் - முன்னாள் சபாநாயகர் கரு - News View

Breaking

Post Top Ad

Thursday, October 15, 2020

20 வது திருத்தத்திற்கு எதிரான மதத் தலைவர்களின் நிலைப்பாடுகளுக்கு செவிசாய்க்கும் நேர்மை அரசாங்கத்திற்கு இருக்குமென்று நம்புகின்றேன் - முன்னாள் சபாநாயகர் கரு

(நா.தனுஜா)

நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் நோக்கில் முன்மொழியப்பட்டிருக்கும் அரசியலமைப்பின் 20 வது திருத்தத்திற்கு எதிராக பௌத்த மற்றும் கத்தோலிக்க மதத் தலைவர்கள் இணைந்து குரல் கொடுப்பது மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்திருக்கும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, 20 வது திருத்தத்திற்கு எதிரான மதத் தலைவர்கள், சிவில் சமூகத்தினர், அரசியல் தலைவர்களின் நிலைப்பாடுகளுக்கு செவிசாய்க்கும் நேர்மை அரசாங்கத்திற்கு இருக்குமென்று நம்புவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில் மேலும் கூறியிருப்பதாவது தற்போது முன்மொழியப்பட்டிருக்கும் அரசியலமைப்பிற்கான 20 வது திருத்தம் இரத்துச் செய்யப்பட்டு அதற்குப்பதிலாக புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்கான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று இரண்டு பௌத்த மகா சங்கங்கள் வலியுறுத்தியிருக்கின்றன. 

நாட்டிற்கு தேவையொன்று ஏற்பட்டிருக்கும் நிலையில், மகா சங்கத்தினரின் பாரம்பரியத்தை நிலைநாட்டும் விதமாக அவர்கள் இத்தகைய முற்போக்கான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளமை மிகவும் வரவேற்கப்பட வேண்டியதாகும். 

மதத் தலைவர்களும் சிவில் சமூகத் தலைவர்களும் தேசத்தை முன்னிறுத்தி ஒன்றுபட வேண்டும் என்பதற்காகவே மாதுலுவாவே சோபித தேரர் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தை உருவாக்கினார். 

இந்நிலையில் தற்போது நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக பௌத்த மற்றும் கத்தோலிக்க மதத் தலைவர்கள் ஒன்றிணைந்து குரல்கொடுப்பது வெகுவாக ஊக்கமளிக்கிறது.

நாட்டிலுள்ள மதத் தலைவர்கள், சிவில் சமூகத்தினர், தொழிற்சங்கங்கள், ஆளுந்தரப்பு மற்றும் எதிர்த்தரப்பைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் மத்தியில் முன்மொழியப்பட்டிருக்கும் அரசியலமைப்பிற்கான 20 வது திருத்தம் தொடர்பான கவலைகளும் விசனமும் அதிகரித்து வருகின்றன. அவர்களின் நிலைப்பாடுகளுக்கு செவிசாய்க்கும் நேர்மை அரசாங்கத்திற்கு இருக்கும் என்று நம்புகின்றேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad