இருப்பை பாதுகாத்துக் கொள்வதற்கு அபிவிருத்தியே மிகவும் அவசியம், கட்சி சார்ந்த சர்ச்சைகளில் காலத்தை கழிக்கும் TNA - வடக்கு, கிழக்கு தமிழர் நிலை குறித்து அமைச்சர் வியாழேந்திரன் - News View

About Us

About Us

Breaking

Monday, September 14, 2020

இருப்பை பாதுகாத்துக் கொள்வதற்கு அபிவிருத்தியே மிகவும் அவசியம், கட்சி சார்ந்த சர்ச்சைகளில் காலத்தை கழிக்கும் TNA - வடக்கு, கிழக்கு தமிழர் நிலை குறித்து அமைச்சர் வியாழேந்திரன்

வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் இருப்பே கேள்விக்குறியாகி உள்ள நிலையில் முதலில் அந்த இருப்பை பாதுகாத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.

அபிவிருத்தி சார்ந்த விடயங்கள் முன்னெடுக்கப்படும் போது அவர்களின் இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்கு அது வாய்ப்பாகிறது என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சராக வடக்கு-கிழக்கு தமிழ் மக்களுக்காக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கு கிழக்கில் அபிவிருத்தியையோ அல்லது மக்களின் உரிமைகள் தொடர்பிலேயோ சிந்திக்கவில்லை. மாறாக கட்சி சார்ந்த சர்ச்சைகளிலேயே அவர்களது காலம் கழிகின்றது. அதனால்தான் அந்தக் கட்சி படிப்படியாக சரிவடைந்தது. அதன் தொடர்ச்சியாகவே இம்முறை தேர்தலில் வீழ்ச்சி இடம்பெற்றுள்ளது.

தமிழ் மக்களின் உரிமை மற்றும் அபிவிருத்தியைப் பெற்றுக்கொடுக்க பொருத்தமானவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரல்ல என்பதாலேயே மக்கள் இந்த முறை அவர்களுக்கு குறைவான ஆதரவையே வழங்கியுள்ளார்கள்.

தமிழ் மக்களின் உரிமை பற்றி சிந்திக்கும் போது, கடந்த காலங்களில் முஸ்லிம் அரசியல்வாதிகள் அரசாங்கத்தோடு இணைந்து சில நிபந்தனைகளை முன்வைத்து அபிவிருத்தி சார்ந்த விடயங்களை முன்னெடுத்தார்கள். அவ்வாறு அபிவிருத்திக்காக போராடியவர்கள் அவர்களின் உரிமை சார்ந்த விடயங்கள் எதையும் இழக்கவில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும்.

ஆனால் தமிழ் மக்களைப் பொருத்தவரை உரிமை அபிவிருத்தி என இரண்டுமே இன்னமும் கேள்விக்குறியாகத்தான் உள்ளது. முப்பது வருட யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான தேவை மிக அதிகமாக காணப்படுகின்றன. வாழ்வாதாரம், தொழில் வாய்ப்பு, கல்வி மேம்பாடு பொருளாதாரத்திற்கான கட்டமைப்புக்களை உருவாக்குவது இவையெல்லாம் அபிவிருத்தி சார்ந்த விடயமாக இருந்தாலும் அந்த மக்களது இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்கான திட்டங்கள் அவை.

இன்று வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் இருப்பே ஒரு கேள்விக்குறியாக உள்ளது. அதனால் முதலில் அந்த இருப்பை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்க வேண்டும். தமிழ் தலைவர்கள் பலரும் தமிழ் மக்களுக்கு பிரச்சனை இருக்கின்றது. பிரச்சினை இருக்கின்றது என்று காலங்காலமாக கூறிக்கொண்டு வருகிறார்களே ஒழிய பிரச்சனைக்கு உரிய தீர்வைப் பெற்றுக் கொள்வதற்கான பாதையில் பயணிப்பதில்லை. 

பிரச்சினையை வைத்துக் கொண்டு நாம் தொடர்ச்சியாக அரசியலை நடத்த முடியாது. அந்தப் பிரச்சினைக்கு உரிய தீர்வை அரசாங்கத்துடன் இணைந்து முடிந்தளவு பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதோடு அதற்குள் உரிமை சார்ந்த விடயங்களையும் நாங்கள் உள்ளீர்க்க முடியும். உரிமை சார்ந்த விடயங்களுக்கு சமமாக அபிவிருத்தி சார்ந்த விடயங்களை முன்னெடுக்க வேண்டும் அதுதான் தற்போது வடக்கு கிழக்கில் முக்கியமாக உள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment