மாடறுப்பு தடையானது முஸ்லிம் விரோத சர்வதேசத்தின் நிகழ்ச்சி நிரல், இது எதிர்பார்த்த ஒன்றுதான் என்கிறார் இம்ரான் மஹ்ரூப் - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 9, 2020

மாடறுப்பு தடையானது முஸ்லிம் விரோத சர்வதேசத்தின் நிகழ்ச்சி நிரல், இது எதிர்பார்த்த ஒன்றுதான் என்கிறார் இம்ரான் மஹ்ரூப்

மாடறுப்பு தடை என்பது அரசு பின்பற்றும் முஸ்லிம் விரோத சர்வதேச நிகழ்ச்சி நிரல் என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார். 

இலங்கையில் மாடுகளை அறுக்க தடை விதிக்க வேண்டும் என ஆளும் கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணை தொடர்பாக கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இது தொடர்பாக மேலும் கருத்து வெளியிட்ட அவர், முஸ்லிம்களுக்கு எதிரான சர்வதேச நிகழச்சி நிரலின்படி செயல்படும் இந்த அரசு கொண்டுவர எதிர்பார்த்துள்ள இந்த சட்டம் எதிர்பார்த்த ஒன்றுதான். எதிர்காலங்களில் இதைவிட பாரிய இனவாத செயற்பாடுகளை இந்த அரசு முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது. அதற்கான சர்வாதிகாரத்தை பெறவே இப்பொழுது இருபதாம் திருத்த சட்டத்தை நிறைவேற்றவுள்ளனர். ஆகவே இவற்றை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பில் சிறுபான்மையினர் தீர்க்கமான முடிவுக்கு வர வேண்டும். 

இச்சந்தர்பத்தில் என்னில் எழும் கேள்விதான் இவ்வாறான சந்தர்பங்களில் அரசுக்கு ஆதரவாக உள்ள சிறுபான்மை பாராளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு செயற்படபோகிறார்கள்? சிறுபான்மையினரின் உரிமைகளை பறிக்கும் சட்டங்கள் நிறைவேற்றப்படவுள்ள சந்தர்பங்களில் இவர்கள் தமது சமூகத்தின் உரிமைகளுக்காக பேசுவார்களா என்பது கேள்விக்குறியே.

இலங்கையில் மாடறுப்பு தடை செய்வதென்பது இயற்கை சமநிலையை குழப்பும் செயற்பாடாகும். விரிவாக சொல்லவேண்டுமானால் இயற்கையான உணவுச்சங்கிலியை குழப்பும் செயற்பாடாகும். 

மாடறுப்பு தடை செய்யப்படுவதனால் பால்தராத மாடுகளின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டு அவை கவனிப்பாரற்று தெருக்களில் சுற்றித்திரியும் நிலை உருவாகும் இதனால் ஏற்படவுள்ள சமூக பொருளாதார சிக்கல்களுக்கு இந்த அரசு முன்வைக்கவுள்ள தீர்வு என்ன?

உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து இறக்குமதியை குறைக்கவேண்டும் என கூறும் இந்த அரசு மாடறுப்பு தடையாலும் இறைச்சி இறக்குமதியாலும் பாதிப்படையவுள்ள உள்நாட்டு பண்ணையாளர்களுக்கு வழங்கவுள்ள தீர்வு என்ன?

இந்த சட்டத்தால் பாதிக்கப்படுவது முஸ்லிம்கள் மட்டுமே என நினைத்தால் அது அரசின் அறியாமை. மாடிறைச்சி, பண்ணை தொழில்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் மூவின மக்களும் சம்மந்தப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரினதும் பொருளாதாரம் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்படும். 

இந்த சட்டமூலத்தால் எமது நாட்டுக்கும் பொருளாதாரத்துக்கும் ஏற்படவுள்ள பாதிப்புக்கள் பற்றி அரசு அறியாமலில்லை. முஸ்லிம்களுக்கு எதிரான சர்வதேச நிகழ்ச்சிநிரலின்படி இந்த அரசு செயற்படுவதால் அவர்களுக்கு இந்த பாதிப்புக்கள் பற்றி எந்த அக்கறையும் இல்லை என தெரிவித்தார்

No comments:

Post a Comment