தபாலகங்களில் இலத்திரனியல் கழிவுகளை பெற்றுக் கொள்ள திட்டம் - News View

Breaking

Post Top Ad

Thursday, September 10, 2020

தபாலகங்களில் இலத்திரனியல் கழிவுகளை பெற்றுக் கொள்ள திட்டம்

தபால் நிலையங்களின் ஊடாக இலத்திரனியல் கழிவுப் பொருட்களை சேகரிக்கும் திட்டமொன்றை, மத்திய சுற்றாடல் அதிகார சபையும், தபால் திணைக்களமும் இணைந்து ஆரம்பித்துள்ளது.

உலக தபால் தினமான ஒக்டோபர் 10ஆம் திகதியை முன்னிட்டு, கூட்டு நிறுவன சமூக பொறுப்பு (CSR) திட்டமாக தபால் திணைக்களத்தினால் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார்.

இலத்திரனியல் கழிவுப் பொருட்களான கையடக்கத் தொலைபேசிகள், கணனிகள், தொலைபேசிகள், வானொலிகள் உள்ளிட்டவற்றை தபால் நிலையங்களின் ஊடாக ஒக்டோபர் 05ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரையான காலப்பகுதியினுள் பொதுமக்கள் கையளிக்க முடியும்.

பயன்படுத்தப்பட்டு கழிவாக அகற்றப்படும் இலத்திரனியல் வீட்டு உபகரணங்கள் மாத்திரமே இவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படும் என்பதோடு, நிறுவனங்களில் பயன்படுத்தப்பட்ட கைத்தொழில் உபகரணங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது எனவும், அவர் தெரிவித்தார்.

போதியளவு இடவசதி இல்லாத தபால் நிலையங்களில் இக்கழிவுகளை சேகரிக்க பிரதேச செயலகங்கள் பயன்படுத்தப்படும்.

இதேவேளை, இலத்திரனியல் கழிவுகளை உரிய முறையில் அகற்றுவது தொடர்பாக இத்திட்டம் பயனுள்ளதாக அமையும் என, மத்திய சுற்றால் அதிகார சபையின் தலைவர் சிறிபால அமரசிங்க தெரிவித்தார்.

இலங்கையில் இலத்திரனியல் கழிவுகளை அகற்றுவதற்கான உரிய திட்டம் எதுவும் இல்லை எனவும், இது தற்போது மிகப்பாரிய கழிவுகளில் ஒன்றாகும் எனவும் தெரிவித்தார்.

இவ்வாறு சேகரிக்கப்படும் இலத்திரனியல் கழிவுகள் மீள்சுழற்சி செய்யப்படும் என்பதோடு, மீள்சுழற்சி செய்ய முடியாத இலத்திரனியல் கழிவுகள் மீள் ஏற்றுமதி செய்யப்படும் எனவும், சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad