(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)
பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகரவின் சத்தியப்பிரமாணம் அரசியலமைப்புக்கு முரண் என எதிர்க்கட்சி தலைவர் தெரிவிக்கையில் அது தொடர்பில் பிரேரணை கொண்டுவந்தால் விவாதிக்க தயார் என அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
மரண தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்ய அனுமதிப்பது அரசியலமைப்புக்கு முரண் என தெரிவித்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நேற்று பாராளுமன்றத்தில் விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றியதற்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், 1982 ஆண்டு செல்வராஜா யோகசந்திரன் (குட்டிமணி) தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி (டெலோ) தலைவராகவும் பாராளுமன்ற உறுப்பினராவும் பெயரிடப்பட்டிருந்தார். தேர்தல் ஆணையாளர் அவரது பெயரை பாராளுமன்ற உறுப்பினராக வர்த்தமானிப்படுத்தி சபாநாயகர் மற்றும் பாராளுமன்ற செயலாளருக்கு அனுப்பியிருந்தார்.
அந்த நபர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் மரண தண்டனை விதிக்கப்பட்டவராவார். என்றாலும் செல்வராஜா யோகசந்திரன் மரண தண்டனை தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்திருந்தபோதும் அவருக்கு பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்ய அன்று இருந்த சபாநாயகர் இடமளிக்கவில்லை.
மேலும் அரசியலமைப்பின் 89 மற்றும் 91 இன் பிரகாரமே அப்போதைய சபாநாயகர் பாக்கீர் மாக்கார் இந்த தீர்மானத்தை மேற்கொண்டிருந்தார். அப்படியாயின் பாக்கீர் மாக்கார் சபாநாயகர் அரசியலமைப்பை பாதுகாத்து சிறந்த முன்மாதிரியை காட்டியிருக்கின்றார். அதனால் நீங்கள் மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவருக்கு பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்வதற்கு அனுமதி வழங்கியது அந்த முன்மாதிரிக்கு முரணாகவும் அரசியலமைப்பின் 89 மற்றும் 91 இன் எதிராகவுமே செயற்பட்டிருக்கின்றீர்கள்.
எனவே செல்வராஜா யோகசந்திரனின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி இல்லாமல்போனது, மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டு, அதற்கு எதிராக மேன்முறையீடு செய்திருந்த நிலையிலாகும். அதனால் சபாநாயகரான நீங்கள் ஏன் அந்த முன்மாதிரியை பின்பற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என கேட்கின்றேன். நீங்கள் எடுத்த தீர்மானத்தால் அரசியலமைப்பின் 89 மற்றும் 91 மீறப்பட்டிருக்கின்றது என்பதை கவலையுடன் தெரிவிக்கின்றேன் என்றார்.
இதற்கு சபாநாயகர் பதிலளிக்கையில், எதிர்க்கட்சி தலைவர் இந்த தர்க்கத்தை மேன் முறையீட்டு நீதிமன்றத்திலே சமர்ப்பித்திருக்க வேண்டுமே தவிர இங்கு அல்ல. மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பு எங்களுக்கு அனுப்பப்பட்டிருந்தது. அதன் பிரகாரமே நாங்கள் செயற்பட்டோம் என்றார்.
இதனைத் தொடர்ந்து மீண்டும் எழுந்த சஜித் பிரேமதாச, சபாநாயகர் என்ற வகையில் பாராளுமன்றத்தின் கெளரவம், சுயாதீனத்தை பாதுகாக்கும் பொறுப்பு உங்களுக்கு இருக்கின்றதே தவிர ஜனநாயகத்தின் பிரதான தூண்களாக கருதப்படும் நீதிமன்றம் நிறைவேற்றுத்துறை, பாராளுமன்றம் என்ற மூன்று துறைகளில் ஏனைய இரண்டுக்கும் பொறுப்புக்கூற நீங்கள் கடமைப்பட்டில்லை. யாருக்கும் அடிமைப்படாமல், சுந்திரமாக தீர்மானம் எடுக்கலாம். அனுரா பண்டாரநாயக்க சபாநாயகராக இருந்து காட்டிய முன்மாதிரியை பார்க்க வேண்டும்.
இதன்போது எழுந்த எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல, பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக பாராளுமன்றத்துக்குள் இடம்பெற்ற விசாரணையை நிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவொன்றை வழங்கியிருந்தது. அப்போது அந்த உத்தரவை சபாநாயகராக இருந்த சமல் ராஜபக்ஷ ஏற்றுக் கொள்ளவில்லை என்றார்.
அதனைத்தொடர்ந்து ஆளுங்கட்சி அமைப்பாளர் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, எதிர்க்கட்சி தலைவர் பிரேமலால் ஜயசேகரவின் சத்தியப்பிரமாணம் தொடர்பில் விடயம் ஒன்றை முன்வைத்திருக்கின்றார். நீதிமன்ற உத்தரவுக்கமைய பிரேமலால் ஜயசேகர உங்களது அழைப்பை ஏற்று பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்ய இந்த சபைக்கு வந்தபோதும் எதிர்க்கட்சியினர் இந்த தர்க்கத்தை முன்வைத்திருந்தனர்.
சபாநாயகர் ஒரு விடயத்தில் தீர்ப்பு வழங்கிய பின்னர் அந்த விடயம் தொடர்பில் மீண்டும் வேறு தர்க்கங்களை கொண்டுவருவதாக இருந்தால் அதற்கு வேறு வழிமுறைகள் இருக்கின்றன. அதனால் குறித்த பாராளுமன்ற உறுப்பினர் சபையில் செயற்படுவதை தடுக்கும் வகையில் இவ்வாறு செயற்படுவது தவறாகும். அதனால் இது தொடர்பில் பிரேரணை ஒன்றை முன்வைத்தால் எங்களுக்கு அது தொடர்பில் சபையில் விவாதிக்க முடியும். மாறாக எமது உறுப்பினரின் வரப்பிரசாதம் மீறும் வகையில் செயற்படும் இவர்களின் நடவடிக்கைகளை ஹென்சாட் அறிக்கையில் இருந்து நீக்க வேண்டும் என்றார்.
அதனைத் தொடர்ந்து மீண்டும எழுந்த சஜித் பிரேமதாச, அரசியலமைப்பு முரணாக செயற்பட்டிருப்பதை நாங்கள் சுட்டிக்காட்டியதை அவ்வாறு ஹென்சாட் அறிக்கையில் இருந்து நீக்க முடியாது. அவ்வாறு நீங்கள் செயற்படவேண்டாம். நாங்கள் முன்னாள் சபாநாயகர்களான அனுரபண்டார, பாக்கீர் மாக்கார் போன்றவர்களின் முன்மாதிரியை பிற்பற்றுமாறே கூறுகின்றோம் என்றார்.
அதற்கு சபாநாயகர், இல்லை. அவ்வாறு செயற்டமாட்டோம். எதனையும் கலந்துரையாடி முடிவுக்கு வருவோம் என்றார்.
No comments:
Post a Comment