மில்லேனியம் சிட்டி பாதுகாப்பு இல்ல சுற்றிவளைப்பு தொடர்பான சான்று ஆவணங்கள் காணாமற்போயுள்ளன - News View

About Us

About Us

Breaking

Friday, September 25, 2020

மில்லேனியம் சிட்டி பாதுகாப்பு இல்ல சுற்றிவளைப்பு தொடர்பான சான்று ஆவணங்கள் காணாமற்போயுள்ளன

2002 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் திகதி இராணுவப் புலனாய்வுப் பிரிவு நடத்திச் சென்ற மில்லேனியம் சிட்டி பாதுகாப்பு இல்லம், பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினரால் சுற்றிவளைக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான முறைப்பாட்டின் சில சான்று ஆவணங்கள் காணாமற்போயுள்ளமை தெரியவந்துள்ளது.

உரிய பாதுகாப்புடன் அவை வைக்கப்படாமையால் சில ஆவணங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பாதுகாப்பாக களஞ்சியத்தில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்த நிலையில் அந்த உத்தரவை நிறைவேற்றத் தவறியமை தொடர்பில் உடனடியாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு இந்த சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகே பதிவாளருக்கு உத்தரவிட்டார்.

மில்லேனியம் சிட்டி பாதுகாப்பு இல்லம் சுற்றிவளைக்கப்பட்டமை தொடர்பிலான வழக்கு முன்னாள் உதவி பொலிஸ் அத்தியட்சகர் குலசிறி உடுகம்பலவிற்கு எதிராகவே தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தலைமை அதிகாரி, ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கபில ஹெந்திரவித்தாரண இன்று மேல் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார்.

பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸின் குறுக்கு விசாரணை கேள்விகளுக்கு பதிலளித்த அவர், பிரதிவாதிகள் உள்ளிட்ட குழுவினர் குறித்த இல்லத்தை எவ்வித நீதிமன்ற உத்தரவும் இன்றியே சுற்றிவளைத்துள்ளதாகக் கூறினார்.

சதித்திட்டமொன்றின் பாணியில் முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையுடன் இராணுவ பொலிஸ் பிரிவின் உத்தியோகத்தர்களும் தொடர்புபட்டுள்ளனர் என்பதே தமது நிலைப்பாடு எனவும் சாட்சியாளர் தெரிவித்துள்ளார்.

மில்லேனியம் சிட்டி பாதுகாப்பு இல்லம் சுற்றிவளைக்கப்பட்டபோது அங்கிருந்த அயுதங்களுடன் சட்டவிரோத ஆயுதங்கள் சிலவற்றையும் சிலர் கலந்துள்ளதாக முன்னாள் புலனாய்வுப் பிரிவு தலைவர் குறிப்பிட்டுள்ளார்

குறித்த இல்லத்திற்கு பொறுப்பாக இருந்தவரின் மனைவியால் அது இராணுவத்திற்கு வாடகை அடிப்படையில் வழங்கப்பட்டிருந்ததை தாம் அறிந்திருந்ததாகவும் சாட்சியாளர் மேலும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment