
நாட்டில் ஜாதி மதம் பாராது ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்ற மக்கள் இடையில் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் இனவாதத்தை தூண்ட முயற்சிப்பதாகவும் பாராளுமன்றில் கன்னி அமர்வின் போது அவர் தெரிவித்த கருத்து முற்றிலும் பிழையான ஒரு கருத்து எனவும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான எஸ்.பீ. திஷாநாயக்க தெரிவித்துள்ளார்.
மஸ்கெலியா சமன் தேவாலயத்தில் இன்று (01) விஷேட வழிபாடுகளில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன் போது, மேலும் கருத்து தெரிவித்த அவர், சி.வி. விக்னேஸ்வரன் தேவையில்லாத ஒரு கருத்தினை கூறியிருக்கிறார். நாட்டில் முதல் மொழி தமிழ், சிங்களம் என்று கூறுவதற்கு அவர் அனைத்தும் அறிந்தவர் அல்ல. அவர் ஒரு நீதிபதி. நாட்டில் முதல் மொழி எதுவென்று கூற அனைத்தும் அறிந்தவர்கள் அதிகமாக உள்ளனர். தொல்பொருள் அறிஞர்கள் உள்ளார்கள்.
ஆகையால் அவர் முதலில் சிங்கள மொழியை கற்றுகொள்ள வேண்டும். தமிழ் மொழியை முறையாக கற்றுகொள்ள வேண்டும். அவருடைய பிள்ளைகளுக்கு தமிழ் மொழியை கற்றுகொடுக்க வேண்டும். ஆகவே அவர் கூறிய கருத்து தமிழ், சிங்களம், முஸ்லிம் போன்ற மதங்களை சார்ந்த மக்கள் மத்தியில் பிரச்சினையை தோற்றுவிக்க கூடிய ஒரு கருத்தினை கூறியிருக்கிறார்.
நாட்டில் இன்று அதிகமான போதைப்பொருள் விற்பனை செய்வோர்களை தொடர்ந்தும் பொலிஸார் கைது செய்து வருகின்றனர். இதன் பின்னால் யாராவது இருக்க கூடும் சிறைச்சாலையிலும் இது இடம் பெற்று இருக்கிறது.
சிறைச்சாலையின் உத்தியோகத்தர்கள் கைது செய்யபட்டு இருக்கிறார்கள். எனவே எமது ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் அதிரடி நடவடிக்கை ஊடாக இது போன்ற சட்டவிரோதமான வியாபாரங்களில் ஈடுபடுவோர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
எதிர்வரும் காலங்களில் எமது நாடு போதைப்பொருள் அற்ற ஒரு புனித நாடாக மாற்றம் பெறும். நுவரெலியா மாவட்ட மக்களுக்கு சேவை செய்ய எனக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதனை நான் பயன்படுத்தி எமது மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதியினை நிச்சயமாக நிறைவேற்றுவேன் என குறிப்பிட்டார்.
மலையக நிருபர் சதீஸ்குமார்
No comments:
Post a Comment