சுமணரெட்ண தேரர் மதகுருவா அல்லது மனநல வைத்திய சேவைக்கு உட்படுத்த வேண்டியவரா ? அரியநேத்திரன் கேள்வி - News View

About Us

About Us

Breaking

Friday, September 25, 2020

சுமணரெட்ண தேரர் மதகுருவா அல்லது மனநல வைத்திய சேவைக்கு உட்படுத்த வேண்டியவரா ? அரியநேத்திரன் கேள்வி

மட்டக்களப்பு மங்களராம விகாரை புத்த பிக்கு அம்பிட்டிய சுமண ரெட்ண தேரர் உண்மையில் மதகுருவா இல்லை இராணுவத் தளபதியா அல்லது மனநல வைத்திய சேவைக்கு உட்படுத்த வேண்டிய ஒருவரா என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என, மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சித் தலைவருமான பா. அரியநேத்திரன் தெரிவித்தார்

புத்த பிக்கு, அரச உத்தியோத்தர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் முறையானதா என வினவியபோதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 2013 ஆம் ஆண்டு தொடக்கம் இவர் மட்டக்களப்பில் ஒரு வன்முறை நிறைந்த அடாவடி ஆசாமியாக நடந்துகொள்ளும் நிலையில் சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டுகின்ற பொலிஸார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை மாறாக அந்த மதகுருவுக்கு ஆதரவு கொடுப்பதை போன்ற தோற்றப்பாட்டை பொலிசாரின் பல சம்பவங்களில் வெளிக்காட்டப்படுவது புலனாகிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக புதிய கோட்டபாய அரசாங்கம் உருவாக்கப்பட்டதன் பின் தொல்பொருள் திணைக்களத்தினால் பல வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தமிழ் பிரதேசங்களில் ஒரு ஆக்கிரமிப்பினை மேற்கொள்ளக்கூடியவாறு செயற்றிட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.

செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் பன்குடாவெளி பிரதான வீதியில் அமைந்துள்ள இனங்காணப்பட்ட தொல்லியல் தொடர்பான ஒரு இடத்தில் பௌத்த மதகுரு ஒருவரால் அரச உத்தியோத்தர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தினை மட்டக்களப்பு மாவட்ட மக்கள் வன்மையாக கண்டிக்கின்றனர்.

ஏற்கனவே இந்த இடத்தில் பல மாதங்களுக்கு முன்னமே சுமண ரெட்ண தேரர் சில சிங்கள மக்களை அழைத்துக்கொண்டு அங்கு அத்துமீறி பன்சாலை ஒன்றை அமைக்க முற்பட்ட வேளையில் அந்த விடயம் நீதிமன்றத்தில் சென்று அங்கு எவரும் செல்ல வேண்டாம் என நீதிமன்ற தடை உத்தரவு உள்ளது ஆனால் அதையும் மீறி சம்பந்தப்பட்ட சுமண ரெட்ண தேரர் அங்கு சென்று சண்டித்தனம் புரிந்து அரச அலுவலர்களை தாக்கியுள்ளார் இவருக்கு யார் இந்த அதிகாரம் கொடுத்தது

பன்குடாவெளி பகுதியில் நடத்தப்பட்ட தொல்லியல் திணைக்கள உத்தியோகத்தர்கள், செங்கலடி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மீதான தாக்குதலை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

இந்த மதகுரு கெவிழியாமடு பகுதி கிராம உத்தியோகத்தர், பட்டிப்பளை பிரதேச செயலக அதிகாரிகள், மட்டக்களப்பு கச்சேரி உத்தியோகத்தர் என பலர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இவையெல்லாவற்றினையும் தாண்டி கடந்த சனிக்கிழமை மிகவும் அருவருக்கத்தக்க வகையில் ஒரு மதகுரு செயற்பட்டதையெண்ணி வெட்கி தலைகுனிய வேண்டும்.

இலங்கையில் பல மதகுருக்கள் உள்ளனர். பௌத்த மதகுருக்களில் சிறந்த பல மதகுருக்கள் உள்ளனர். ஆனால் இந்த மதகுருவைப் பொறுத்தவரையில் தமிழர் பகுதிகளில் வன்முறையினை பிரயோகிப்பதன் ஊடாக ஒரு இனக்கலவரத்தினை தூண்டும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார். இந்த மதகுருவானவர் வன்முறையாளனாக செயற்படுவது என்பது ஒரு வெட்கக்கேடான விடயம். 

பௌத்த மதத்தில் உள்ள இவ்வாறான மதகுருக்களின் மூலம் வன்முறைகளில் ஈடுபடும் செற்பாடுகளை கடந்த ஐந்து வருடமாக முன்னெடுத்து வரும் நிலையில் சட்டம் ஒழுங்கினை பாதுகாக்க வேண்டிய பொலிஸார் எந்தவித நடவடிக்கையினையும் எடுக்கவில்லையென்பது மிகவும் கவலைக்குரியதாகும். ஏனைய மதகுருக்கள் வன்முறைகளில் ஈடுபடும்போது பொலிஸார் சட்ட ரீதியான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கின்றனர்.

ஆனால் மட்டக்களப்பு பௌத்த விகாரையில் கடமை புரியும் மதகுருவினைப் பொறுத்தவரையில் அரச நிர்வாகத்தில் கடமை புரியும் அதிகாரிகள் மீது இவ்வாறு தொடர்ச்சியான தாக்குதல்கள் நடத்தி வருவதை பார்த்துக்கொண்டு வாய்மூடி இருக்க முடியாது.

இவ்வாறான செயற்பாடுகளுக்கு இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென்பது கவலைக்குரிய விடயமாகும். பன்குடாவெளியில் தொல்லியல் திணைக்கள மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களை அறையில் பூட்டிவைத்து அவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டிருந்த நிலையில் அங்கு வந்த பொலிஸார் எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது என்பது கண்டிக்கத்தக்க விடயமாகும். இது இலங்கை அரசுக்கே அவமானமான செயலாகும்

பொலிஸார் முன்னிலையில் தாக்குதல் நடத்தப்பட்டபோதிலும் எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்காதது எங்களுக்கு பலத்த சந்தேகத்தினை ஏற்படுத்துகின்றது. பொலிஸார் இருக்கும்போதே குறித்த தேரர் இவ்வாறு நடந்துகொள்ளும் நிலையில் ஏனைய அதிகாரிகள் அச்சமடைந்துள்ள நிலை உருவாகியுள்ளது. 

இந்த மதகுருவினால் தொடர்ச்சியாக அரச உத்தியோகத்தர்கள் மீது மேற்கொள்ளப்படும் வன்முறை சம்பவத்திற்கு ஜனாதிபதி உரிய நடவடிக்கையெடுத்து சமூகத்தினையும், அரசாங்க உத்தியோகத்தர்களையும் பாதுகாக்கக்கூடியவாறு நடவடிக்கையெடுக்க வேண்டும்.

இலங்கை ஒரு நாடு ஒரு சட்டம் என கூறும் மாண்புமிகு ஜனாதிபதி கோட்டபாய, இந்த புத்த துறவிக்கு தமிழரை தண்டிக்கவும் காணி அபகரிப்பு செய்யவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் எனவும் மேலும் கூறினார்.

பா.மோகனதாஸ் - தினக்குரல்

No comments:

Post a Comment