தமிழ் கட்சிகளின் உணவு தவிர்ப்புப் போராட்டம் ஆரம்பம்! - News View

About Us

About Us

Breaking

Friday, September 25, 2020

தமிழ் கட்சிகளின் உணவு தவிர்ப்புப் போராட்டம் ஆரம்பம்!

தமிழ் மக்களுக்கு எதிரான அடக்கு முறைகளை அரசு நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகளால் அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி சிவன் ஆலயத்தில் இன்று (26) காலை 8 மணி முதல் குறித்த உணவு தவிர்ப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

திலீபன் உயிர்க் கொடை வழங்கிய நாளான இன்றைய தினம் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இந்திய - இலங்கை அரசுகளிடம் நீதி கேட்டு, 5 அம்சக் கோரிக்கையை முன்வைத்து உணவு தவிர்ப்பால் உயிர் துறந்த திலீபனின் 33 ஆம் ஆண்டு நிறைவு இன்றாகும்.

நல்லூர் கந்தன் ஆலய வீதியில் 12 நாட்கள் உணவு தவிர்ப்பில் இருந்த திலீபன், 1987 ஆம் ஆண்டு செப்ரெம்பர் 26ஆம் நாள் காலை 10.48 மணி அளவில் உயிரிழந்தார்.

திலீபனின் நினைவேந்தலை நடத்த தமிழர் தாயகத்தில் இம்முறை பொலிஸாரால் அனுமதி மறுக்கப்பட்டது. நீதிமன்றத் தடையும் பொலிஸாரால் பெறப்பட்டது.

இந்நிலையில் நினைவேந்தல்கள் நடத்துவது தமிழ் மக்களின் உரிமையாகும், அதனைத் தடுக்கக் கூடாது என்று வலியுறுத்தி தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து ஜனாதிபதிக்கு கடந்த வாரம் கடிதம் அனிப்பியிருந்தன. எனினும் ஜனாதிபதி அதற்கு பதிலளிக்காத நிலையில் நினைவேந்தல் தடை நீடிக்கப்பட்டது.

அதனை அடுத்து தமிழ் மக்களை அடக்குமுறைக்கு உள்படுத்துவதை அரசு நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகள் இன்று அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது.

இந்தப் போராட்டத்துக்கும் பொலிஸாரால் அவரச அவசரமாக நீதிமன்றத் தடை பெறப்பட்டது.

மாவை சேனாதிராசா, சி.சிறிதரன், சீ.வீ.கே.சிவஞானம், பா.கஜதீபன், என்.சிறிகாந்தா, எம்.கே.சிவாஜிலிங்கம், க.அருந்தவபாலன், சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட்டவர்கள் குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

யாழ். நிருபர் பிரதீபன்

No comments:

Post a Comment