பாராளுமன்றம் செல்கிறார் ஞானசார தேரர் - முன்னாள் பொதுச் செயலாளருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 22, 2020

பாராளுமன்றம் செல்கிறார் ஞானசார தேரர் - முன்னாள் பொதுச் செயலாளருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

(இராஜதுரை ஹஷான்) 

அபேஜன பலவேகய கட்சிக்கு கிடைக்கப் பெற்ற ஒரு தேசியப்பட்டியல் ஆசனத்திற்கு அக்கட்சியின் தலைவர் சமன் பெரேராவை பரிந்துரை செய்து அவர் சுயமாக பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்ததன் பின்னர் அவ்விடத்துக்கு பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரை நியமிக்க அபேஜன பல வேகய கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது. 

இவ்விடயம் தொடர்பில் அபேஜன பலவேகய கட்சியின் தலைவர் சமன் பெரேரா குறிப்பிடுகையில், அபேஜன பலவேகய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் வேதிரிகம விமலதிஸ்ஸ தேரர் குறுகிய நோக்கங்களை கொண்டு செயற்பட்டமையின் காரணமாக கிடைக்கப் பெற்ற ஒரு தேசியப்பட்டியல் விவகாரம் பிரதான பிரச்சினையாக தோற்றம் பெற்றுள்ளது. 

பாராளுமன்றத்துக்கு தான் செல்ல வேண்டும் என இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 7ம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு தேசியப்பட்டியல் பெயர் பட்டியலில் தனது பெயரை பரிந்துரை செய்து விட்டு தலைமறைவாகினார். 

கிடைக்கப் பெற்ற ஒரு தேசியப்பட்டியல் ஆசனம் அபேஜன பலவேகய கட்சிக்குள் பிரதான பிரச்சினையாக தோற்றம் பெற்றுள்ளது. கட்சியின் மத்திய குழுவின் அனுமதி இல்லாமலேயே வேதிரிகம விமலதிஸ்ஸ தேரர் தனது பெயரை தேசியப்பட்டியல் ஆசனத்துக்கு பரிந்துரை செய்தார். 

கடந்த 7ம் திகதிக்கு பின்னர் இவர் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு பதில் பொதுச் செயலாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது. 

அபேஜன பலவேகய கட்சிற்கு கிடைக்கப் பெற்ற ஒரு தேசியப்பட்டியல் ஆசனம் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு வழங்கப்பட வேண்டும் என்பது வாக்களித்த 67 ஆயிரம் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

ஞானசார தேரர் பாராளுமன்றம் செல்வதற்கு ஒரு சில சட்ட சிக்கல்கள் காணக்கப்பட்டது. சட்ட சிக்கல்களுக்கு தீர்வு காண உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறள் மனுத்தாக்கல் செய்துள்ளோம். 

அபேஜன பலவேகய கட்சி சார்பில் பாராளுமன்றத்துக்கு அக்கட்சியின் தலைவராக என்னை அனுப்பி பின்னர் நான் சுயமாகவே பதவி விலகி அவ்விடத்துக்கு பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரை நியமிக்க கட்சி செயற்குழு தீர்மானித்துள்ளது. உயர் நீதிமன்றின் தீர்ப்பு கிடைக்கப் பெற்ற பின்னர் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment