உலகின் எந்த பாராளுமன்றிலும் இடம்பெறாத செயற்பாடு என விசனம் - லக்‌ஷ்மன் கிரியல்ல எம்.பிக்கு அமைச்சர் தினேஷ் பதில் - News View

Breaking

Post Top Ad

Wednesday, September 9, 2020

உலகின் எந்த பாராளுமன்றிலும் இடம்பெறாத செயற்பாடு என விசனம் - லக்‌ஷ்மன் கிரியல்ல எம்.பிக்கு அமைச்சர் தினேஷ் பதில்

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளும் போது சட்டப் பிரச்சினையை எழுப்பும் நடை முறை இலங்கையிலல்ல உலகிலும் எந்தவொரு பாராளுமன்ற சம்பிரதாயத்திலும் இல்லையென சபை முதல்வரும் வெளிவிவகார அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்குத் தெரிவான பிரேமலால் ஜயசேகர, மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் பிரபகாரம் நேற்றுமுன்தினம் எம்.பியாக சந்தியப்பிரமாணம் செய்துக்கொண்ட தருணத்தில் தாம் எழுப்பிய சட்டப் பிரச்சினைக்கு சபாநாயகர் செவிகொடுக்கவில்லையென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல நேற்று சபையில் எழுப்பி ஒழுங்குப் பிரச்சினைக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல எழுப்பிய ஒழுங்குப் பிரச்சினையில், பிரேமலால் ஜயசேகர, சபாபீடத்திற்கு முன்வந்து எம்.பியாக சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளும் தருணத்தில், நான் சட்டப் பிரச்சினையொன்றை எழுப்பினேன். ஆனால், அதற்காக எனது பெயர் குறிப்பிடப்படவில்லை என்பதுடன், கண்டுகொள்ளவில்லை. பிரேமலால் ஜயசேகர, எம்.பியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட பின்னரே பேசுவதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளது. அவர் பதவி பிரமானம் செய்வது குறித்தே நாம் சட்டப் பிரச்சினையை எழுப்பினோம். ஆனால், அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட பின்னரே வாய்ப்பளித்தீர்கள் என சபாநாயகரை நோக்கி கேள்வியை தொடுத்தார்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர், எம்.பி ஒருவர் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளும் கௌரவமான சந்தர்ப்பதில் வேறு பிரச்சினைகளை எழுப்புவது சட்டரீதியானதல்ல என்றார்.

இதன்போது கருத்து வெளியிட்ட சபை முதல்வர் தினேஸ் குணவர்தன, பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளும் போது சட்டப் பிரச்சினையை எழுப்பும் நடைமுறை இலங்கையிலல்ல உலகிலும் எந்தவொரு பாராளுமன்ற சம்பிரதாயத்திலும் இல்லை. முன்னாள் சபாநாயகரின் காலத்திலும் இவ்வாறுதான் இருந்தது என்றார்.

லோரன்ஸ் செல்வநாயம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment

Post Bottom Ad