ஐந்து மாடிக் கட்டட உரிமையாளருக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை - உரிய அனுமதிகளுடனே கட்டியதாக உரிமையாளர் கூறுகிறார் - News View

Breaking

Post Top Ad

Monday, September 21, 2020

ஐந்து மாடிக் கட்டட உரிமையாளருக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை - உரிய அனுமதிகளுடனே கட்டியதாக உரிமையாளர் கூறுகிறார்

கவனயீனமான செயற்பாடு காரணமாக மூவர் உயிரிழக்கவும் இரு வீடுகள் சேதமடையும் காரணமாக இருந்த குற்றச்சாட்டின் பேரில் உடைந்து விழுந்த ஐந்து மாடிக் கட்டிடத்தின் உரிமையாளருக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க இருப்பதாக கண்டி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாசிங்க நேற்று தெரிவித்தார். 

சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்த பின்னர் விசாரணை ஆரம்பிக்க இருப்பதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் பொறியியல் பிரிவு, நகர அபிவிருத்தி அதிகார சபை, கட்டட ஆய்வு நிறுவனம், இணைந்து விசாணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க இருப்பதாக கண்டி மாநகர ஆணையாளர் சந்தன தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கண்டி, பூவெலிகட பகுதியில் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளை அகற்றும் நடவடிக்கை நேற்று (21) தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டது.

பூவெலிகட பகுதியில் நேற்று முன்தினம் (20) காலை 5 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்திருந்தது. குறித்த கட்டிடம் உடைந்து அருகில் இருந்து வீட்டின் மீது விழுந்ததில் குறித்த வீட்டில் இருந்த தாய், தந்தை மற்றும் கைக்குழந்தை ஒன்று உயிரிழந்திருந்தனர்.

இதேவேளை இடிபாடுகளை அகற்றும் நடவடிக்கை சீரற்ற காலநிலை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று காலை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. இதேவேளை கட்டிட ஆய்வு நிறுவனமும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

கட்டிட உரிமையாளர் அனுமதித்த திட்டத்திற்கு அப்பால் நிர்மாணத்தை மேற்கொண்டாரா என்பது குறித்தும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் இருந்த அறிக்கை பெற உள்ளதாக கண்டி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாசிங்க நேற்று தெரிவித்தார்.

கண்டி மாநகர சபையின் அனுமதியுடன்தான் இந்த ஐந்து மாடிக்கட்டடம் நிர்மாணிக்கப்பட்டதா என்பது குறித்து விசாரணை ஆரம்பித்துள்ளதாக கண்டி மாநகர ஆணையாளர் சந்தன தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பொறியியல் பிரிவு, நகர அபிவிருத்தி அதிகார சபை, கட்டட ஆய்வு நிறுவனம், இணைந்து விசாணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.

2007 இல் இந்த கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. உரிய அனுமதிக்கமைய கட்டப்பட்டதா என விசாரணை நடைபெறுகிறது. இது தொடர்பில் நாளை தௌிவாக கூற முடியும். நகர சபை வழங்கிய அனுமதி பின்னர் பல தடவைகள் திருத்தப்பட்டுள்ளது. 2015 இல் கட்டிட ஆய்வு நிறுவன அனுமதி பெறப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

இதேவேளை உரிய அனுமதிகளுடனே கட்டிடத்தை கட்டியதாகவும் தாங்களும் இறுதி நேரத்திலே உயிர் பிழைத்ததாகவும் கட்டிட உரிமையாளர் கூறியுள்ளார். முன்கூட்டி அறிந்து உண்மையை மறைத்ததாக கூறும் குற்றச்சாட்டை அவர் நிராகரித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad