இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அவுஸ்திரேலிய பிரதமருக்கு அழைப்பு - அரசாங்கத்தின் முன்னுரிமை விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடல் - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 9, 2020

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அவுஸ்திரேலிய பிரதமருக்கு அழைப்பு - அரசாங்கத்தின் முன்னுரிமை விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடல்

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுடன் சந்திப்பு | தினகரன்
(நா.தனுஜா) 

இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிஸனுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்திருக்கின்றார். 

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹொலி நேற்று செவ்வாய்கிழமை அலரி மாளிகையில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடினார். 

இதன்போது மஹிந்த ராஜபக்ஷவின் பொதுத் தேர்தல் வெற்றி மற்றும் பிரதமராக மீள்நியமனம் என்பவற்றுக்கு வாழ்த்துத் தெரிவித்த அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர், கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிரான போராட்டத்தில் இலங்கை வழங்கிய ஒத்துழைப்பிற்கு தனது நன்றியையும் வெளிப்படுத்தினார். 

அதேவேளை பல வருட காலமாக தொடர்ச்சியாக அவுஸ்திரேலிய வழங்கி வருகின்ற உதவிகளுக்கு நன்றி தெரிவித்த பிரதமர், அண்மையில் அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிஸனுடன் தான் தொலைபேசியில் கலந்துரையாடியது பற்றியும் நினைவுகூர்ந்தார். 

அத்தோடு கொரோனா வைரஸ் பரவல் நிலைமை கட்டுப்பாட்டிற்குள் வந்ததும் இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்ளுமாறும் அவுஸ்திரேலிய பிரதமருக்கு மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்தார். 

மேலும் இந்தச் சந்திப்பின்போது புதிய அரசாங்கம் முன்னுரிமை வழங்கியிருக்கும் விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. அவற்றில், குறிப்பாக விவசாயத்தை ஊக்குவித்தல் மற்றும் நாட்டு மக்களுக்கு சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொடுத்தல் ஆகிய விடயங்களில் அரசாங்கம் கவனம் செலுத்தியிருப்பதாக பிரதமர் சுட்டிக்காட்டினார். 

அத்துடன் இரு நாடுகளிலும் பொதுவாக பெருமளவானோர் நாள்பட்ட சிறுநீரக நோயினால் பாதிக்கப்படுவது குறித்தும் இதன்போது பேசப்பட்டது. அவுஸ்திரேலியாவில் 10 பேரில் ஒருவர் இந்நோயினால் அவதியுறுவதாக அந்நாட்டு உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டினார். 

கல்வி, தொழிற்பயிற்சி, பயங்கரவாதத் தடுப்பு, ஆட்கடத்தல் தடுப்பு மற்றும் போதைப் பொருள் கடத்தல் ஒழிப்பு ஆகிய விடயங்களில் ஒன்றிணைந்து ஒத்துழைப்புடன் செயலாற்றுவது பற்றியும் இச்சந்திப்பின் போது பேசப்பட்டது. 

இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்பு மிகவும் விரிவடைந்திருப்பதாகக் குறிப்பிட்ட உயர்ஸ்தானிகர், இலங்கை ஒரு கேந்திர முக்கியத்துவமுடைய தளமாக உருவாகுவதைக் காண்பதற்கு அவுஸ்திரேலியா விருப்பம் கொண்டிருப்பதாகவும் எடுத்துரைத்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment